கோவை கருமத்தம்பட்டி பகுதியில் முதியவரும், வாலிபர் ஒருவரும் மதுபோதையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் 2 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. கடை திறந்ததும் மதுபிரியர்கள் ஆசையுடன் கடைக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கினர். மதுபாட்டில்களை கையில் வாங்கிய மது பிரியர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தேங்காய் உடைத்தும், பட்டாசு வெடித்தும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ஒருசிலர் மதுவாங்கி குடித்து விட்டு ஆங்காங்கே ரகளை மற்றும் தங்களது சாகச விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர்.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் முதியவரும், வாலிபர் ஒருவரும் மதுபோதையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக கருமத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 50 வயது மதிக்கத்தக்க முதியவரும், 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும் மது போதையில் ரகளையில் ஈடுபட்டிருப்பதை பார்த்தனர்.
அவர்கள் அருகில் சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். அதற்கு முதியவர், போலீஸ்காரரை பார்த்து, தலைவரே எங்களை விடுங்கள். நாங்கள் என்ன தப்பு செய்தோம். எதற்காக எங்களை பிடிக்கிறீர்கள், பதில் சொல்லுங்கள் என கேட்டு ரகளையில் ஈடுபட்டதுடன், இன்று வர முடியாது. நாளை காலையில் வந்து உங்களை பார்க்கிறேன் என பேசினார்.
பின்னர் போலீசார் 2 பேரையும் வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்திலும் தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டு கொண்டே இருந்தனர். இன்ஸ்பெக்டர் சண்முகம், மதுபோதையில் இருந்த 2 பேரிடம் விசாரித்தார். இதில் அவர்கள் கிட்டாம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன்(27), மணிகண்டன்(55) என்பதும் தெரியவந்தது.
விசாரணை செய்த இன்ஸ்பெக்டரிடம், நாங்கள் என்ன திருடினோமா? என எதிர் கேள்வி கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், “பப்ளிசிட்டிக்காக போலீஸ் இப்படி பண்ணுது” என காவல்துறையினரை கலாய்க்கவும் செய்தனர். மேலும் முதியவரும், வாலிபரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளவும் செய்தனர். போலீசார் விசாரித்து கொண்டிருந்தபோது அங்கிருந்து வெளியில் ஓடினர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்தனர்.
அப்போது மது போதையின் உச்சத்திற்கு சென்ற வாலிபர் போலீசாரிடம், “வீரப்பனுக்கு ஆயுதங்களை கடத்தியதே நாங்க தான் சார் என எச்சரிக்கை தகவலை சொல்லி” மிரட்டியும் பார்த்தார். ஆனாலும் போலீசார் அவர்களை விடவில்லை. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்கள் 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் போலீசார் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
மேலும் 2 பேர் மீது மதுபோதையில் தகராறில் ஈடுபடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கருமத்தம்பட்டி போலீஸ் நிலையம் வாசலிலேயே போலீசாருடன், குடிபோதையில் மதுபிரியர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அளவுக்கு அதிகமான மதுபோதையில் தள்ளாடிய நிலையில் வந்த வாலிபர் அங்கு நின்ற பஸ்சில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரால் பஸ்சின் படிக்கட்டை கண்டுபிடிப்பதற்கு வெகுநேரமாகி விட்டது.
பஸ்சின் அருகே தள்ளாடியபடி சென்ற வாலிபர் பஸ்சை பிடித்து ஏற முயற்சிப்பதும், முடியாமல் கீழே விழுவதுமாக இருந்தார். சுமார் 10 நிமிடத்திற்கு பிறகு பஸ்சின் பின்பக்க படியை பிடித்து பஸ்சில் ஏறினார். இதை அங்கு இருந்த பயணிகள் உள்பட அனைவரும் பார்த்து குலுங்கி, குலுங்கி சிரித்ததுடன் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர்.