டெல்டா கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட காலி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் பணியாற்றிய இடத்தில், வைரஸ் தொற்று உறுதியான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களுக்கு டெல்டா வைரஸ் திரிபு தொற்றியுள்ளதா? என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டெல்டா கொரோனா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் எந்தெந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயியல் பிரிவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய அறிக்கையில், ஏலவே டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மேலதிகமாக, 14 பேர் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
அவர்களில் அதிகமானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள். மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலும் இந்த திரிபுடன் ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கராப்பிட்டிய, மாத்தறை தனியார் வைத்தியசாலை மற்றும் அங்கொடை ஆகிய வைத்தியசாலைகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலேயே குறித்த 14 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.