அரசாங்கத்துக்கு 20கோடி ரூபாவை மீதப்படுத்த அமைச்சர் வாசுதேவ முயற்சி!

245 0

நீர் வழங்கல் காரியாலய ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறாமல் பொது
மக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நீர் விநியோக வேலைத்திட்டத்தினால் அரசாங்கத்துக்கு 20 கோடி ரூபா மீதப்படுத்திக்கொடுத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நீர்வழங்கல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கோரிக்கைக்கமைய கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை தினத்தில் இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்ன மற்றும் எம்பிலிபிட்டிய தேர்தல் தொகுதியில் 7 கிராமங்களுக்கு நீர் குழாய்களை அமைத்து புதிய நீர் இணைப்புக்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

58 கிலா மீற்றர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைத்திட்டத்தை யாருக்கும் ஒப்பந்த அடிப்படையில் வழங்காமல் அந்த பிரதேச மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நீர்வழங்கல் சபை ஊழியர்களின் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. நீர்வழங்கல் சபை ஊழியர்கள் இதற்காக தங்களின் ஒருநாள் சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அர்ப்பணிப்பு செய்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் அரசாங்கத்துக்கு 20கோடி ரூபாவை மீதப்பட்டுத்தி கொடுத்திருக்கின்றனர்.

மேலும் இந்த வேலைத்திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்வழங்கல் சபையின் காரியாலங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை மேற்கொண்டிருந்தனர். ஜனாதிபதியின் செளபாக்கிய நோக்குக்கமைய 2015 இல் அனைவருக்கும் குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கும் நோக்கில், அதற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு சக்தியாக இருப்பதற்காக நீர்வழங்கல் சபையின் ஊழியர்கள் தாமாக முன்வந்து இந்த உன்னத வேலைத்திட்டத்துக்கு பங்களிப்பு வழங்க தீர்மானித்திருந்தனர்.