இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை-நிவாட் கப்ரால்

257 0

தற்போது இறக்குமதிக்கு வரையறுக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு மேலதிகமாக வேறு பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி இடை நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி தரப்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு வேறு மூலோபாயங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்பார்ப்பதாகவும் கூறினார்.

தற்போதைய நெருக்கடி நிலைக்கு காரணம் கொவிட் தொற்று நிலைமை மற்றும் நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கையும் காரணம் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் 2015 தொடக்கம் 2019 வரையிலான காலப்பகுதியில் வளர்ச்சி காணப்பட்டது. அக்கால்பகுதியில் 6.8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பின்னர் 2.3 சதவிதமாக குறைவடைந்தது. ரூபாவின் பெறுமதியை தக்கவைத்துக்கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் 3,089 மில்லியன் அமெரிக்க டோலர்களை சந்தையில் முன்னெடுத்தனர்.

இவ்வாறு செய்யாதிருந்தால் இத்தொகை எம்மிடமே இருந்திருக்கும். கொவிட் தொற்றின் காரணமாக கடந்த வருடம் 66 நாட்கள் வெறுமனே கழிந்தன.இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி வேகம் -16.7 வரை குறை வடைந்தது. இது பாரிய பிரச்சினையாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.