மின் நுகர்வோரிடம் கூடுதல் வைப்புத்தொகை கேட்பதை ரத்து செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

223 0

ஊரடங்கால் சரியான வருமானம் இல்லாமல் தவித்து வரும் இவ்வேளையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின்சார நுகர்வோரிடம் வைப்பு தொகை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுக்கு இடையில், தற்பொழுது தான் சிறிது சிறிதாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு வருகிறது.

ஊரடங்கால் சரியான வருமானம் இல்லாமல் தவித்து வரும் இவ்வேளையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின்சார நுகர்வோரிடம் வைப்பு தொகை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சிரமமான நேரத்தில் வைப்புத் தொகை செலுத்த சொல்வதால் ஏழை, எளிய, நடுத்தர மக்களும் தொழில் நிறுவனங்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள்.
மின்சார வாரியம்

தற்பொழுது ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருந்ததால் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதனால் தற்பொழுது கணக்கீடு செய்தால் வைப்புத் தொகை அதிகமாக இருக்கும். மக்கள் மாதாந்திர மின் கட்டணம் செலுத்தவே சிரமப்படும் இந்நேரத்தில் வைப்பு தொகை செலுத்த சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

ஆகவே தற்பொழுது மின்சார வாரியம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை கருதியும், தொழில் நிறுவனங்களின் சிரமமான சூழ்நிலையையும் உணர்ந்து கூடுதல் வைப்புத் தொகை வசூலிப்பதை தமிழக அரசும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகமும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.