இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கடந்த 29 ஆம் திகதி முன்னாள் சாம்பியன் ஜேர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி மோதியது.
இதில் உள்ளூர் இரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜேர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்தனர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது. நொக்-அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துயது 1966-ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.
இந்த நிலையில் போட்டியை நேரில் காண வந்த ஜேர்மனியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஜேர்மனி அணி தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது உதைபந்தாட்ட அரங்கத்தில் உள்ள திரைகளிலும் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த இங்கிலாந்து இரசிகர்கள் இணையத்தில் அதனை கிண்டல் செய்து பதிவிட்டனர்.
இணையத்தில் இந்த சம்பவம் வைரலாக பரவிய நிலையில், அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து கால்பந்து இரசிகர்கள் பலர் கருத்து பதிவிட தொடங்கினர். இதனால் இணையத்தில் கருத்து மோதல்கள் உருவானது. இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்பவர் £ 500 பவுண்டுகளை இலக்காக வைத்து ஆன்லைனில் நிதி திரட்டி ஆரம்பித்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட அந்த சிறுமிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். இச்செய்தி எழுதும் வரை அந்த சிறுமிக்காக £34,762 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ளவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்று அந்த சிறுமி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேநேரம் குறித்த சிறுமியின் பெற்றோரிடம் இந்த நிதியை வழங்க ஜோயல் ஹுயுக்ஸ் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சி செய்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேநேரம் அவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டால் அவர்களிடம் நிதி கையளிக்க விரும்புவதாக ஜோயல் ஹுயுக்ஸ் தெரிவித்துள்ளார். அதேநேரம் அவர்கள் தொடர்புக்கு வரவில்லை என்றால் அந்த நிதியை ஒரு தொண்டு நிறுவனத்திடம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதலாவது தேர்வே தனது விருப்பம் (சிறுமியின் குடும்பத்திடம் கையளிப்பதே) எனக் கூறினார் ஜோயல் ஹுயுக்ஸ்.