இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.
தகவல் தொழில்நுட்பமும் வலையமைப்பும் குறித்த விடயத்தில் எவ்வாறான ஒரு மாற்றத்தை இந்த உலகம் கண்டு வருகிறது. இதனை மக்கள் தமக்கு ஏற்றாற்போல் பயன்படுத்துகின்றார்களா? அல்லது அது ஒரு பகுதியில் வளர்ந்து கொண்ட போகும் போக்கில் தனிப்பட்ட வசதிகளுக்கும் பெருமைக்குமாக பயன்படுத்தவதுடன் நின்றுவிடுகிறதா? வலையமைப்பு குறித்த அரசியல் பார்வை என்ன? சர்வதேச அரசியலில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு என்ன என்பன குறித்த பார்வை ஒன்றை இந்த கட்டுரை முன்வைக்கிறது.
“ஆனால் அந்த முடிவு ஓர் ஆரம்பமுமாகும். மிகஅதிக நேரத்தை இந்த போராட்டத்தில் அர்ப்பணித்த முகுந்தன் அவனது கடைசி வருட பல்கலைக்கழக பரீட்சையை திரும்ப எடுக்க வேண்டிய நிலையில் அவனைப்போல் மேலும் பல உலக நாடுகளில் புலம்பெயர் தமிழ் இளவயதினர் அரசியல் மீள்எழுச்சி ஒன்றை அனுபவித்துள்ளனர். ஈழ சுதந்திர தாயகத்தை பெற்று கொள்ளும் போராட்டம் தோல்வியில் முடிவடைவதை கண்டு அந்தப் போராட்டத்தை மேற்கு நாடுகளில் தமது கைகளில் எடுத்து கொள்கின்றனர். அவர்கள் தமது தவணைக்கு ஏற்ப உறுதியுடன் போராடுவார்கள். நிகழ்காலத்திற்கு ஏற்ப இதனை ஒரு Black Berry revelolution என்றே கூறலாம்.” (FT-2009)
மேற்படி பந்தி இங்கிலாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். அந்த பத்திரிகை புலம்பெயர் தமிழ் மக்களது போராட்டத்தை Black Berry revelolution என்ற பெயரில் அழைத்திருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் Black Berry என்ற கைதொலைபேசி மிகவும் பிரபல்யமாக இருந்தது. ஒரு குறும் தகவல் அனுப்ப வேண்டுமானால் ஒருவருக்கு ஒரு தடவையில் அனுப்பக்கூடிய நிலையே ஏனைய கைத்தொலைபேசிகளில் வசதி இருந்தது ஆனால் Black Berry யில் மட்டும் ஒரே தடவையில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு அனுப்பக்கூடிய வசதி இருந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி எமது இளைஞர் யுவதிகள் திடீரென கூடி போராட்டத்தை ஆரம்பிக்கும் வலுவைப் பெற்றிருந்தனர்.
தொடர்ந்து தமிழ் மக்களது நகர்வுகளிலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் புலம்பெயர் நிறுவனங்களின் பங்களிப்பிலும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஆனால் அன்று ஆயுதப்போர் முடியும் தறுவாயில் தமிழ் மக்கள் தமது கையில் இருந்த தொலைதொடர்பு தொழில்நுட்ப உபகரணங்களின் உபயோகத்தின் வேகமும் தன்மையும் இன்று அதிக வசதிகள் இருந்தும் அதன் திசை பல்வேறு கோணங்களில் இருப்பதை காணகூடியதாக உள்ளது.
இந்தநிலையில் சர்வதேச அரசியலில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்த பார்வை ஒன்று மிகவும் அவசியமாகிறது. பல்வேறு வகையான உதாரணங்கள், பார்வைகள் இங்கே வைக்கப்படலாம். சமூக தளங்களின் ஆக்கிரமிப்பு இன்றைய உலகில் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு சமூகங்களும் துறை ஆர்வலர்களும் இதனை தமது தேவைக்கு ஏற்றாற்போல் பாவித்து வருகின்றனர்.
வலையமைப்புகள் சட்டபூர்வமாகவும் உதாரணமாக அரசாங்க அலகுகள் பொது நிறுவனங்கள் என்பனவும், சட்டத்துடன் இணைந்து கொள்ளாத வகையிலும் உதாரணமாக உள்ளூர் கள்வர் குழுக்களில் இருந்து பயங்கரவாத நடவடிக்கை குழுக்கள் வரை, செயற்படும் தன்மையை பொதுவாக பார்வையில் உள்ளது.
வலையமைப்பு என்பது முடிச்சுகளின் தொடர்ச்சியான இணைவே ஆகும். ஒரு சங்கிலித்தொடர் இணைவை ஏற்படுத்தக் கூடிய குறிப்பிட்ட உறவுநிலையின்பால் கொண்டுள்ள கட்டமைப்பு என்று கூறலாம். சர்வதேச அரசியலில் இந்த முடிச்சுகள் தனிப்பட்டவர்கள், குழுக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், அரசுகள் அல்லது அரசாங்க அலுவல் பகுதிகளும் அதன் உத்தியோகத்தர்களும், ஆகிய பல அலகுகளாக பார்க்கப்படுகிறது.
அதனால் வலையமைப்பு என்பது கணணிப் பார்வையில் வெளிப்படக்கூடிய ஒரு சமூக அசாதாரண நிகழ்வுகளை உலகம் பார்க்கும் தன்மை என்று கூறலாம். இதிலே ஒரு முக்கிய விடயம் என்னவெனில் பெரும்பாலான வலையமைப்புகள் அதிகாரங்களால் கட்டப்படுத்த முடியாத நிலை இருப்பதாகும்.
2009 ஆம் ஆண்டு இறுதியில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இடம்பெற்ற சமூகத்தள உபயோகங்கள் குறித்த பார்வை அதிகாரத்திற்கு எதிராக இடம்பெற்ற பிரச்சாரத்தில் முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. ஈரானில் 2009இல்இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஏற்கனவே நாட்டின் தலைவராக இருந்த அகமதி நிஜாட் அவர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டதும் தேர்தலில் ஒழுங்கு முறையீடு இடம்பெற்றதாக கூறி எதிர்க்கட்சியினர் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
போராட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் சர்வதேச அளவில் பிரச்சாரப்படுத்துவதற்கும் அதன் ஏற்பாட்டாளர்கள் வீதிகளில் இறங்கி ஆதரவு தேடி நிற்கவில்லை பதிலாக கணணிகளை உபயோகித்து கீச்சகம் (ருவிட்டர்) கணக்கு வாயிலாகவும் முகநூல் (பேஸ்புக்) வாயிலாகவும் ஆதரவு தேடினர். உறுதியான இணைய சேவைகள் இல்லாத போதும் கிடைத்த வசதிகளை வைத்து கொண்டு சர்வதேசமெங்கும் தமது கருத்துகளும் பார்வைகளும் சென்றடையும் படி செய்தனர்.
ஈரானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுமதியற்ற ஒன்றுகூடல்களுக்கு தடை விதித்திருந்தது. சீர்திருத்தவாதிகளான எதிர்கட்சியினர் திட்டமிடுவதற்கும் ஆட்திரட்டலுக்கும் முகநூல் பக்கங்களை இரகசிய குழுக்களாக பயன்படுத்திக் கொண்டனர். இதன் மூலம் அரச அதிகார வரம்புகளை மீறி தினமும் தெகிரானிலும் இதர பிரதான நகரங்களிலும் தொடர்ச்சியாக கூட்டங்கள் இடம்பெற்றன.
ஈரானிய அரசு இணைய தடை மென்பொருள்களை பிரயோகித்து தகவல் வடிகட்டும் நடவடிக்கைகள் பலவற்றை அமல்படுத்தி இருந்தது. போராட்டங்களும் அதிகரிக்க இணையத்தளங்களும் முகநூல் பக்கங்களும் ஆங்காங்கே தடை செய்யப்பட்டன. தகவல் வடிகட்டல் மேலும் இறுக்கப்பட்டது. இணைய சேவையின் துரிதம் (வேகம்) பத்தில் ஒரு மடங்காக குறைக்கப்பட்டது.
அதேவேளை தெகிரானில்இணையசேவை ஈரானிய தொலைதொடர்பு நிறுவனத்தால் மட்டுமே வழங்கப்படுவதால் கணினி உபயோகம் செய்தவரின் IP முகவரியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருந்த போதிலும் போராட்டக்காரர்களின் செயற்பாட்டை இலகுவில் முறியடித்து விட முடியவில்லை.
தொடர்ந்து 2011இல் அராபிய இலைதுளிர்கால எழுச்சிகளிலும் சுமார் பத்தில் ஒன்பது ரியூனீசியர்களும், எகிப்தியர்களும் முகநூலை தமது போராட்ட ஒழுங்குபடுத்தும்ஊடகமாகப் பயன்படுத்தினர் என்பது செய்தி. முகநூலிலே அழைப்பு விடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் எல்லாம் பிரதான நகர வீதிகளிலே முடிவடைந்தன. அரசாங்க பிரச்சார இயந்திரங்களின் வார்த்தைகளும் படங்களும் எழுத்துகளும் முகநூல், கீச்சகம்(ருவிட்டர்) போன்ற சமூகத்தளங்களால் முறியடிக்கப்பட்டன. பெறுமதியற்றப் போயின.
நாம் எந்த வீதியில் நிற்கிறோம் என்ன செய்து கொண்டு நிற்கிறோம் என்ற நிகழ்கால தகவல்களை புகைப்படங்களுடன் வலையமைப்புகள் ஊடாக இதர நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனால் ஒரு அரசு மட்டுமல்ல தெற்கு மத்திய தரைகடலில் ஆரம்பித்த அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்கள் அரபு நாடுகள் எங்கும் பரவியதை பார்த்தோம்.
அரசுகள் இணையத்தளங்களையும் முகநூல் பக்கங்களையும் தடை செய்தன. ஆனால் இவை மக்களின் எழுச்சியை மேலும் தூண்டுவதாகவே அமைந்தது. புதிய பல ஆக்கங்கள் ஊடாக தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன, போராட்டங்கள் இடம்பெற்றன.
தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் தேசங்களுக்கிடையே பல மாற்றங்களை உருவாக்கி இருந்தது. மக்கள் புதிய விடயங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக அமைந்தது. சனநாய நடைமுறைகளை தெரிந்து கொண்டவர்களாக மக்கள் மாறினர்; வெளிநாடுகளின் கவனத்தை மிகவும் விரைவாக அணுகக்கூடிய தன்மையை உணர்ந்தனர். மனித உரிமை அமைப்புகள் சனநாயக மாற்றங்களுக்கு குரல் கொடுக்கும் நிறுவனங்களின் தலையீட்டை உருவாக்கினர். இதனால் தான் இன்றைய நிலையை வடஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் அடைந்திருக்கின்றன.
தொடர்ந்து தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி கண்டு வருவதை Manuel Castlls என்ற ஆய்வாளர் இந்த வளர்ச்சியை பற்றி எழுதும்போது மனித நாகரீகத்தின் செயல்முறை வளர்ச்சிப்போக்கில் ஆரம்பத்தில் மண்ணை ஆய்வு செய்து தயாரிப்புகள் மூலம் விவசாயம் செய்து தனது தேவையை பூர்த்தி செய்யும் வழிவகைகளை கண்ட பிடித்தோம். அது விவசாய புரட்சி காலமாக கணிக்கப்பட்டது. பின்பு கைத்தொழில் நாகரீகம் ஆரம்பமானது. மிகப் பரந்த அளவில் முளைவிட்டு வளர்ந்தது. உயிரோட்டம் இல்லாத சக்தியின் பயன்பாட்டை கொண்ட பொறிமுறைகளின் வளர்ச்சியால் உற்பத்திகள் அதிகரித்தது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தன.
இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தைச் சமூக ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், இப்பொழுது நாம் அறிதலை பிரதான மூலப்பொருளாக கொண்ட உற்பத்திக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கே காண்பதுவும் வாழ்வதுவும் மூன்றாவது நாகரீகமான தகவல்தொடர்பு நாகரீகத்தில் என்பது Castlls அவர்களின் வாதமாகும்.
இந்த நாகரீகம் வளர்ந்த நிலையை அடையும் வரை, அதிகாரங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலைகள் இருக்கும் சட்டபூர்வ வலையமைப்பு சமூகங்கள் தமது தொழிற்பாட்டில் இடையூறுகள் ஏற்படவும், தகவல் திரிபுகளை உருவாக்கவும் கூடிய தடங்கல்கள் ஏற்பட பெரும் வாய்ப்புகள் உள்ளன.
இதன் ஒருகட்டமாகவே அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய தலையீட்டின் மூலம் வெற்றி பெற்றதான குற்றச்சாட்டும் உள்ளது. தேர்தல் பிரச்சார காலங்களில் அவருக்கு எதிராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்ரன் அவர்களின் பிரச்சாரத்தை சமூகத்தளங்களில் வலுக்குறைவடைய செய்தமை, திரிபுபடச் செய்தமை, ட்ரம்ப் அவர்களின் பேட்டிகளை அதீத வலை நீரோட்டத்தில் அதிக பார்வையாளரை சென்றடைய வைத்தமை என பல்வேறு நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆக வல்லரசுகள் கூட வலையமைப்பு சமூகங்களால் பெரும் தாக்கத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வலையமைப்பு சமூகங்களை கணினியில் கட்டுப்படுத்தும் உலக வலையமைப்புத் திட்டம் குறித்த Castlls அவர்களின் ஆய்வில் புதிய சட்டதிட்டங்களை கொண்ட ஒரு வலையமைப்பு கட்டமைப்பை உருவாக்குவது மிக அவசியமானது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒரு உதாரணமாக கடந்த வருடம் நைஜீரியாவில் போக்கோ ஹராம் என்ற பயங்கரவாதக் குழு இருநூறு பாடசாலை மாணவிகளைக் கடத்திச் சென்றிருந்தது. அந்த நிலையில் Bring Back Our Girls என்ற போராட்டம் உலகெங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பயங்கரவாத இயக்கம் ஒன்றிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் அமெரிக்க அதிபரின் துணைவி மிஷேல் ஒபாமா அவர்களும் இணைந்து குறுந்தகவல் புகைப்படம் வெளியிட்டு தனது ஆதரவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச அளவில் சமூகத்தளத்தின் தாக்கமும் அதன் பின்னூட்டப் பொறிமுறையும் எவ்வளவு பெறுமதி வாய்ந்தது என்பதையும், இராசதந்திரத்தில் சமூகத் தள யுகம் ஒன்று உருவாகுவதையும் இது எடுத்து காட்டுகிறது.
அத்துடன் தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் கூட கீச்சக (ருவிட்டர்) பாவனையில் அவர் விட்ட தவறுகளால் தேர்தல் பிரசாரத்தில் கேள்விக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் அண்மையில் தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க ஆளில்லா நீரடி வேவு கலத்தை சீனர்கள் கைப்பற்றியதையிட்டு ட்ரம்ப் கீச்சகம் (ருவிட்டர்) மூலமே தமது எதிர்ப்பு கருத்தை வெளியிட்டிருந்தார்.
சர்வதேச இராசதந்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நடைமுறை உலக பொருளாதார ஒழுங்கை நிலை நிறுத்தலுக்காகவும், மேலைத்தேய யதார்த்தவாத கட்டமைப்பை பேணிப்பாதுகாக்கவும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு உலகில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வலையமைப்பு மூலம் சமூக அமைப்புகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய தேவைகளுக்காக அவசியமானது என்ற கருதப்படுகிறது.
ஏற்கனவே சர்வதேச அரசியலில் உள்ள பலசமநிலையும் மேலைத்தேய யதார்த்தவாதமும் இதற்கு ஈடுகொடுக்குமா என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளது. சர்வதேச அரசியலில் யதார்த்தவாதம் என்பது இயற்கையாக மனித இனத்தின் பண்புகளில் இருந்து உருவான தற்காப்பை மையமாக கொண்டு வளங்களை திரட்டி உயர்ந்த நிலையை அடையும் நோக்கில் அடாவடித்தனம் கொண்ட தன்மையாகும். பூகோள சட்டத்தை நிலைநிறுத்த பொதுவான ஒரு அமைப்பு இல்லாத நிலையில் வல்லரசு நாடுகளால் யதார்த்தவாதம் பேணப்படுகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில் உலகில் பல்வேறு நாடுகள் முகநூல் பக்கங்களையும் நுண்பதிவுகளையும் பல்வேறு வகையிலும் தடை செய்தும் கண்காணித்தும் வருகின்றன. உதாரணமாக சீனாவில் முகநூல் முற்று முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சமூக திடநிலை எப்பொழுதும் அதி உச்சநிலையில் பேணப்படுவது சீன கம்யூனிச கட்சியினதும் சீன அரசாங்கத்தினதும் பண்பும் பொறுப்பும் ஆகும்.
அதேவேளை 2009ஆம் ஆண்டு தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாடுகளுடன் கையாளப்படும் என்ற உத்தரவாதத்தின் கீழ் SINA கூட்டுத்தாபனம் என்ற சீனாவின் மிகப்பெரிய இணைய ஊடக நிறுவனம் நுண்பதிவு சமூகத்தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்றிருந்தது.
Sina Weibo என்ற பெயரில் சீனாவில் முதலாவது சமூகத்தளம் உருவானது இதனை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான சமூகத்தள வியாபார நோக்க இணையத்தளங்கள் உருவாகின. Weibo வின் பாவனை சீனாவில் சுமார் நான்கு வருடத்தில் 331 மில்லியனாக அதிகரித்தது. ஆனால் அதீத உபயோகமும் சுதந்திரமான தகவல் பரிமாற்றங்களும் உடனடியாக தகவல்கள் பரிமாறி கொள்ளப்பட்டதால் மக்கள் கருத்துகள் மிகவும் தாராளமாக இணைய நீரோட்டத்தில் கலந்தது. சுதந்திர பேச்சுரிமை சமூகநீதி என்பன குறித்த உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய கலந்துரையாடல்கள் அதிகரித்து காணப்பட்டன.
தொடர்ச்சியான கண்காணிப்புகளின் பின்பு 2013ஆம் ஆண்டு சீன அரசாங்கம் தொடர்ச்சியான சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. Weibo, Wechat ஆகிய சமூகத்தள நிறுவனங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக உள்ளக தகவல் தணிக்கை சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அத்துடன் சமூகத்தள பாவனையாளர்களும் பெருமளவில் குறைந்தனர். தனிப்பட்டவர்களோ அல்லது ஊடக நிறுவனங்களோ சமூக திட நிலையை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் தண்டிக்கப்படுவார்கள். இதனால் Weibo, Wechat போன்ற சமூகத்தளங்கள் என்றும் சுதந்திரமாக செயற்பட முடியாது.
ஆனால் இந்திய நிலவரத்தில் அரசியல் தலைவர்களே சமூகத்தளங்களில் அங்கத்தவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரதமர் மோடி அவர்களே முகநூல், கீச்சகம் (ருவிட்டர்) பக்கங்களை தமது பிரச்சார ஊடகங்களாகவும் சர்வதேச தொடர்பு ஊடகங்களாகவும் புலம்பெயர் இந்தியர்களிடம் வைத்து கொள்ளும் உறவுப்பாலமாகவும் உபயோகித்து கொள்கிறார்.
ஆகவே சமூகத்தளங்கள் இன்று வெளியுறவுக் கொள்கையின் பிரதான ஊடகமாக மாறி இருக்கிறது. சமூக அங்கத்தவர் ஊடகவியலால் மிகப்பெரிய பாரம்பரியச் செய்தி நிறுவனங்கள் பல இந்த நேரடி சமூக தொடர்பாடலால் தமது வியாபாரத்தை இழந்து வருகின்றனர். புதிய ஊடக நிலவனப்பை உருவாக்கி உள்ளது. தடைகள் அற்ற நாடுகளில் மிகவும் இலகுவான வளர்ச்சியை கண்டு வருகிறது. மற்றைய நாடுகளில் அதிகாரத்திற்கு சவால் விடும் எதிரியாக பார்க்கப்படுகிறது.
நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் போது அனைத்து மனித இனத்திற்கும் வளர்ச்சியையும் தீய விடயங்களில் பயன்படுத்தப்படும் போது டிஜிட்டல் வயதின் மறுபக்கத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது.
எமது சமுதாயத்தைப் பொறுத்தவரையில் சமூகத்தளங்களின் பயன்பாடு பொதுவாக தனிப்பட்ட தகவல்களை பரிமாறி கொள்ளும் ஊடகமாகவே பெருமளவில் பார்க்கப்படுகிறது. எமது பாரம்பரிய ஊடகங்கள் நேரடி செய்தி சேகரிப்பு கலந்துரையாடல் நிகழ்வுகளுக்காக உபயோகப்படுத்துகின்றன. அரசியல் நோக்கில் நிறுவனங்களின் அங்கத்தவர்கள் அங்காங்கே Skype மாநாடுகளை உபயோகப்படுத்துவது கவனத்தில் கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆனால் மேலைத்தேயங்களில் அரசியல் இடம்பெறுவது போன்ற சமூகத்தளத்தை பிரதானமாக கொண்டு எந்த ஒரு அமைப்பும் இயங்கவில்லை என்றே கூறலாம். மேல் நாடுகளில் தமது இரத்த உறவுகளை கொண்ட எம் போன்ற சமுதாயம் மிகவேகமாக பல துறைசார் விடயங்களை ஒழுங்கமைத்து செயற்பட மிக அதிகமான இடம் இருக்கிறது.
இல்லையேல் இந்த இடத்தை இட்டு நிரப்புவது உள்ளூர் சங்கிலித் திருடர்களாகவே இருப்பர். அவர்கள் தமக்குள்ளே வலயம் அமைத்து செயல்படும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது.
– லோகன் பரமசாமி