வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை குத்தைக்கு எடுத்து வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாணத்தின் தென்னை அபிவிருத்தி சபையின் மானிய கொடுப்பனவு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இந்நிகழ்வில் வடக்கு முதல்வர் தொடர்ந்து உரையாற்றுகையில்
”யுத்தம் என்பது வெறுமனே துப்பாக்கிச் சூடும் செல் தாக்குதலுமாக இருக்கவில்லை.
பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். பல பாரிய தென்னை மரத் தோட்டங்களும் ஏனைய வீடு வாசல்களில் காணப்பட்ட தென்னை மரங்களும் அடியோடு அழிக்கப்பட்டன. தென்மராட்சி பகுதி ஒரு சூனியப் பிரதேசமாக அல்லது கட்டாந்தரையாக ஆக்கப்பட்டது.
இந்நிலையில், முடியுமானவரை தென்னைகளை மீள நாட்டுவதற்கு முன்வர வேண்டும். காணியுள்ள ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்கப்படுகின்ற குறைந்த பட்சம் ஐம்பது தென்னை மரங்கள் முறையாக பராமரிக்கப்படின் 5 வருட காலப்பகுதியில் தாளுண்ட நீரை தலையாலே தருவதற்கு தென்னைகள் தயாராகிவிடுவன.
இன்று யுத்தம் முடிவுற்று 7 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. பலரின் காணிகள் விடுவிக்கப்பட்டு 5 அல்லது 6 வருடங்களுக்கு மேற்பட்ட போதும் அவற்றில் இதுவரை எந்தவித பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளாது அவை தரிசு நிலங்களாக காணப்படுவது வேதனைக்குரியது. நீண்டகால இடப்பெயர்வு அவர்களை தூர இடங்களில் குடியமரச் செய்துவிட்டதால் அவர்கள் தமது பாரம்பரிய காணிகளில் வந்து குடியிருக்கவோ அல்லது பயிர்ச் செய்கைகளில் ஈடுபடவோ பின்நிற்கின்றார்கள். பலரின் முதுமையும் அவர்களை பின்நிற்க வைக்கின்றன.
இவ்வாறான காணி உரித்தாளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் காணிகளை தென்னை பயிர்ச்செய்கை சபை குத்தகைக்கு எடுத்து அவற்றை வளப்படுத்த முன்வர முடியாதா என்ற கருத்தை தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.