வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் – தமிழ் மக்கள் பேரவை கலந்துரையாடல்

428 0

tmp 2வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைத்தல் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07.07.2016) மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் டேவிட் வீதியிலுள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துறையாடலில் துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலின் போது பின்வரும் முன்மொழிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வன்னிப் பெருநிலப்பரப்பின் மத்திய பகுதியான மாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் அமைவதே பொருத்துடையது ஆகும்.
வடமாகாணதுக்கான பொருளாதார மத்திய நிலையம் என்பதால் வடக்கு மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைவது அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை வடபகுதி மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.
அதே நேரம், இப்பிரதேசம் எதிர்காலத்தில் பல்துறை சார் அபிவிருத்தியை எட்டுவதற்கும் வாய்ப்பாக அமையும்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைவது பொருத்தப்பாடானது என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் தரப்பில் வாதப் பிரதி வாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழர் நலன் சார்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வர வேண்டிய தேவை உள்ளது.
எனவே, அமையப் பெறும் பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவிலிருந்து வடக்கு நோக்கியதாக முல்லைத்தீவு வவுனியா மாவட்ட விழிம்பில் அமைவதே பொருத்தப்பாடுடையது என்பதால், ஓமந்தையில் அமைவதே அடுத்த சிறந்த தெரிவாக இருக்க முடியும். இத்தெரிவு, பொருளாதார மத்திய நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்குத் தேவையான நிலப்பிரதேசத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே வடபகுதி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நன்மை கருதி பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டு நிற்கின்றோம்.
அத்துடன்இ பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடத்தை வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விடயம் அல்ல என்பதையும், இது ஒரு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டியது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழு குறிப்பிட்டுள்ளது.