முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடனடி நடவடிக்கையின்பேரில் சவுமியாவுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது.
மேட்டூர் அணையை திறப்பதற்காக சேலம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மேட்டூர் பொட்டனேரி பகுதியைச் சேர்ந்த சவுமியா என்ற இளம்பெண் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 பவுன் தங்கச்சங்கிலியை வழங்கினார். மேலும் தனக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்ட பதிவில், ‘சகோதரி சவுமியா அளித்த கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று உறுதி அளித்திருந்தார்.
இந்தநிலையில் மு.க.ஸ்டாலினின் உடனடி நடவடிக்கையின்பேரில் சவுமியாவுக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்துள்ளது. மேலும் அவருக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பணி நியமன ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று சவுமியாவின் வீட்டுக்கு நேரில் சென்று வழங்கினார்.