அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் – சரத் பொன்சேக்கா

215 0

எரிபொருள் விலை அதிகரிப்பு உட்பட மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான பல தீர்மானங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே இதே நிலைமை தொடருமாயின் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலக சந்தையில் எரிபொருள் தாங்கியொன்றின் விலை 20 டொலர் வரை குறைவடைந்த போதிலும், அதன் மூலம் பயன்பெறக் கூடிய சலுகையை இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தின் ஊடாக நிதியமொன்றை ; ஸ்தாபித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

தனவந்தர்களுக்கு வரி சலுகையை வழங்கியமையின் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது அந்த சுமையை மக்கள் மீது இறக்க முயற்சிக்கின்றனர். இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றத்தின் ஊடாக மிகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு, தேவையேற்படின் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதற்கும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் பின்வாங்கப் போவதில்லை. இதுவே எமது எதிர்பார்ப்பாகும்.

எந்தவொரு விடயத்தையும் முறையாக செய்து முடிக்க முடியாத மற்றும் முக்கிய தீர்மானங்களை ஸ்திரமாக எடுக்க முடியாத அரசாங்கத்தின் இயலாமை எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒரு விடயத்தைக் கூறுகின்றார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் வெளிநபர் அல்ல. அதே போன்று பொதுஜன பெரமுனவும் அரசாங்கமும் வெவ்வேறானவை அல்ல. அவ்வாறிருக்கையில் இவர் பிரிதொரு கதையைக் கூறுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் உண்மை பிரச்சினையான எரிபொருள் விலை விவகாரம் மறைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.