யாழில் ஒருதொகை கஞ்சாவுடன் மூவர் கைது!

250 0

பருத்தித்துறை கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 237 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை படகில் கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, கரையை நோக்கி சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று பயணிப்பது கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து குறித்த படகினை வழிமறித்தது கடற்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, கேரள கஞ்சா கொண்ட இரண்டு சாக்குகள் படகில் காணப்பட்டன. அதனால் படகில் பயணித்த மூவரையும்  கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேக நபர்களால் கடலில் வீசப்பட்ட கேரள கஞ்சாவின் மேலும் ஆறு சாக்குகள் இருப்பது தெரியவந்தது.

அவற்றையும் கடற்படையினர் கடலில் தேடுதல் நடாத்தி மீட்டனர். அதன் மூலம் 08 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 237 கிலோ 500 கிராம்  கேரள கஞ்சா கடற்படை கைப்பற்றியது.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 71 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் 27 வயதுடையவர்கள் எனவும்,  இருவரும் பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்தவர்கள் என்றும்,  மற்றையவர் அச்சுவேலி வளலாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.