கொரோன வைரஸிற்கு மத்தியில் பொதுமக்கள் மீது அதிக சுமையை செலுத்தியமைக்காக கடும் விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ள ஜனாதிபதி எரிபொருள்விலை அதிகரிப்பை நியாயப்படுத்தியுள்ளார்.
விலைஅதிகரிப்பு அவசியமானது,ஏனைய சமூக பொருளாதார நன்மையளிக்கும் இலக்குகளை அடைவதற்கு இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொதுவான தந்திரோபாயத்தின் ஒரு அம்சமே விலை அதிகரிப்பு என அவர் தெரிவித்துள்;ளார்.
இது நாட்டின் வங்கி முறையை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது,குறைந்த வட்டிவீதத்தை பேணுவதை. வெளிநாட்டு நாணயத்தை செலவிடுவதை குறைப்பதை நோக்கமாக கொண்டது என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இது மக்களின் சுகாதாரம் நலன்புரி ஆகியவற்றை பாதுகாப்பதற்கான தீர்மானம் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு இறக்குமதியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை, முதலீட்டை அடிப்படையாக கொண்ட, நுகர்வோர் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட ,அல்லது உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்ட பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது இந்த தீர்மானம் எனவும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான பல காரணங்கள் குறித்து ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பது இதற்கான ஒரு காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இந்த அதிகரிப்பு தொடரும் என்பதை சந்தை போக்குகள் புலப்படுத்துகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள்களிற்காக பெருமளவு அந்நிய செலாவணியை செலவிடும் நாடாக இலங்கை காணப்படுகின்றது மேலும் பல சேவைகள் இந்த இறக்குமதியை அடிப்படையாக வைத்து இயங்குகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.