மதுரையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

240 0

மதுரையில் கைத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 190 கிலோ கஞ்சா, 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரித்தபோது, அவர்கள் காமராஜர்புரத்தை சேர்ந்த பூமிநாதன்(வயது 21), அவரது சகோதரர் சோலை(34) என தெரியவந்தது. இதில் பூமிநாதன் மீது ஏற்கனவே 4 கொலை வழக்குகள் உள்ளதும், தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டியன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே அவர்களை பின்தொடர்ந்து வந்த ஆட்டோ ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்த ஒருவன் தப்பி ஓடி விட்டான். மேலும் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 2 கிலோ எடை கொண்ட 30 பண்டல்களில் மொத்தம் 60 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. ஆட்டோவை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்த போது அவர் வில்லாபுரத்தை சேர்ந்த காளிமுத்து(42) என்பதும், தப்பி ஓடியவர் காமராஜர்புரத்தை சேர்ந்த அருண்குமார்(28) என்பதும் தெரியவந்தது.

அதன்பின்னர் பூமிநாதனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பிரபல ரவுடியான வெள்ளைக்காளியின் மருமகன் என்பதும், அவர் சக்கிமங்கலம் சதீஸ், பிரகாஷ் மூலம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கஞ்சா பொட்டலங்களை அருண்குமாரின் மாமனார் முனியசாமி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது.

இதைதொடர்ந்து அவனியாபுரம் திருப்பதி நகரில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று அங்கு மேலும் 65 பண்டல்களில் இருந்த மொத்தம் 130 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. பின்னர் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன், அவரது சகோதரர் சோலை, ஆட்டோ டிரைவர் காளிமுத்து ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 190 கிலோ கஞ்சா, ஒரு கைத்துப்பாக்கி, தோட்டக்கள், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.