அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் சுமந்திரன்

230 0

கோரமான ஆட்சியை, இந்த அரசாங்கம் கைவிடாவிட்டால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டி நேரிடுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கமானது, மக்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் பிரயோகித்து, மக்களை அடக்கியாள நினைப்பதாகவும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு பாடுபடுகின்றதெனவும் சாடினார்.

எதிர்காலத்திலாவது சரியான முறையில் செயற்படாவிட்டால், ஏனைய எதிர்கட்சிகளுடன் கூட்டமைப்பினரும் இணைந்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பொமெனவும் அதற்குரிய வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்போமெனவும், சுமந்திரன் எச்சரித்தார்.

எனவே, கடும் போக்கையையும் அடக்குமுறையையும்  குடும்ப ஆட்சி முறையையும் கைவிட்டு செயற்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடைய பங்களிப்போடு, அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமென்றும் கூறினார்.

இதேவேளை, தற்போதுள்ள கொரோனா நிலைமையைக்  கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நடவடிக்கைகள் எவையும், இந்த அரசாங்கத்தால்; முன்னெடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய சுமந்திரன், அதற்குரிய பொறுப்பை சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட இணைந்த அமைச்சுகளும் இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் கூறினார்.

‘சுகாதார அமைச்சுக்குள்ள அதிகாரத்தினை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா அல்லது வேறு என்னதான் நடைபெறுகின்றது என்பது எமக்கு புரியவில்லை. ஆனால், இந்த விடயங்கள் தொடர்பில் யாராவது ஒருவர் பொறுப்புக்கூற முன்வர வேண்டும். இல்லையென்றால். அவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக,  தங்களது பதவிகளை இராஜினாமா செய்யலாம்’  என, அவர் மேலும் தெரிவித்தார்.