அன்னதானக் கந்தனில் அன்னமிடும் கை

322 0

பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஓயாமல் தொடரும் அன்னதானப் பணி நடைபெறுகிறது. இவர்களைப் போன்றோர்களால் தான் இன்னமும் செல்வச்சந்நிதி ஆலயம் அன்னதானக் கந்தன் என்கிறார்கள்.

அன்னதானக் கந்தன் என போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயச் சூழலில் நீண்டகாலமாகப் பல்வேறு சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் அன்னதானப் பணி ஓயாமல் தொடர்கிறது.

தற்போதைய நிலையிலும் பராமரிக்க யாருமின்றி, உற்றவர்களின் அன்பு இன்றி சந்நிதியான் ஆலயச் சூழலில் தங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் தினமும் சந்நிதியான் ஆச்சிரமத்திற்குச் சென்று தங்கள் பசிப் பிணியைப் போக்கிவரும் நிலையில் அவர்களின் நன்மை கருதி இந்த இக்கட்டான சூழலிலும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் அன்னதானப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.

அதுமாத்திரமல்லாமல் தற்போதைய அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு கொரோனாத் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், பயணக் கட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்களுக்கும் தொடர்ச்சியான உதவிகள் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் மேற்படி ஆச்சிரமத்தில் வைத்தும், வீடுகள் தேடிச் சென்றும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமாத்திரமன்றித் தற்போதைய சூழலில் ஆச்சிரமத்தை தேடிவரும் உதவிக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கொடிதிலும் கொடிது பசிப் பிணி. அந்தக் கொடிய பசிப் பிணியைப் போக்கும் வகையில் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகம் தொடர்ச்சியாக அன்னதானப் பணியை மேற்கொண்டு வருவதுடன் காலத்தின் தேவையறிந்து சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருவது பாராட்டுதற்குரியது.

அந்தவகையில் தற்போதைய பயணக் கட்டுப்பாட்டிற்கு மத்தியிலும் மேற்படி ஆச்சிரமத்தின் அன்னதானப் பணி மூலம் தினமும் பயன்பெற்று வரும் மூத்தோர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதுடன், சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்துக்குத் தமது நன்றிகளையும் வெளிப்படுத்தினர்.