பொலிஸில் சரணடைந்த நிலையில் நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதி மற்றும் ரயில் கடவையை மறித்து, கல்கந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் பஸ் சாரதிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்கும் யோசனைக்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 2ம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும், அதனை பொருட்படுத்தாத சிலர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையால், அப் பகுதியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதன்பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுஇவ்வாறு இருக்க, இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிசந்திர மற்றும் லலந்த குணசேகர ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், இருவரும் இன்று பொலிஸில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.