வெலிகம – மிரிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சுமார் 200 கிலோ கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, குறித்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம், கடற்படையினர், கடலோராப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ஒன்றிணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் 11 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற படகொன்றின் ஊடாக, குறித்த போதைப் பொருள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வலைகளில் மறைக்கப்பட்டு, சூட்சுமமான முறையில், அவை கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விசாரணைகள், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.