மத்திய வங்கியின் எச்சரிக்கைக்குப் பின்னரே அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்தது – அஜித்

260 0

நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே, எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்த பின்னரே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உலகின் பல்வேறு நாடுகளில், எரிபொருட்களின் விலை இலங்கை விட அதிகமாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும், இலங்கை விட சிறியதொரு விலை வேறுபாட்டிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் விலை நிர்ணயம் செய்வதற்கு விசேட நிதியமொன்று எதிர்காலத்தில் நிறுவப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்தின் ஊடாக, வங்கிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கும், ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நிலைமை, நாட்டின் கடன் விகிதாசாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், நிதி இராஜாதங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்திருந்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த  விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எரிப்பொருள் விலையேற்றத்திற்கான பொறுப்பை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்  ஏற்றுக்கொண்டு, அவர் அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடு பல்வேறு நெருக்கடி நிலைமைகளை தற்போது சந்தித்துள்ள நிலையில், மக்களுக்கு மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் பிரதானிகளை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தும் நோக்குடன் அமைச்சர் உதய கம்மன்பில செயற்பட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, இந்த விவகாரத்திற்கு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்பினை ஏற்று, தமது பதவியில் இருந்து விலக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.