நண்பர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களிலேயே நான் வைத்தியசாலை சென்று அவரை பார்த்தேன், அவருடைய உடலில் சூடு இருந்தது. அதை நான் தொட்டுப்பார்த்த நிமிடங்கள் இன்னும் எனது நினைவில் இருந்து நீங்கவில்லை என அமைச்சர் மனோ தெரிவித்தார்.
கொழும்பு – ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் ,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்களின் பின்னர் விசாரணைகள் இடம்பெற்றன, இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ரவிராஜ் கொலைக்கு நீதி கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
மஹிந்த ஆட்சிக்காலத்தில் இல்லாத நம்பிக்கை நல்லாட்சிக்கு கிடைத்திருந்தாலும் அது தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. இதே நிலைதான் மார்ச் மாதம் நடைபெற உள்ள மனித உரிமைகள் ஆணையகத்திலும் பிரதிபலிக்கும் என்று தற்போது விளங்குவதாகவும் அறிவித்தார்.
இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமந்திரன் தாக்கல் செய்யவிருக்கும் மேன்முறையீட்டுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் இதன்போது அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.