பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிரதமர் ரணில், மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடாதிபதிகளை கண்டியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், இரண்டு மாநாயக்க தேரர்களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக பெவிது ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபாயராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.மாநாயக்க தேரர்கள் என்ன கூறினார்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது பிரரதமர் ரணில் விக்ரமசிங்க “ புத்தங் சரணங் கச்சாமி, தம்மங் சரணங் கச்சாதமி, சங்கங் சரணங் கச்சாமி” எனக் கூறினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக மாநாயக்க தேரர்களை பிரதமர் எள்ளி நகையாடியுள்ளதுடன் அவர்களை இழிவுபடுத்தியுள்ளார்.நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசியல் அமைப்பு பற்றி பேசுவதற்கு மாநாயக்க தேரர்கள் பிரதமரை அழைத்திருந்தனர்.
வெறுமனே புத்தரை நினைத்துப் பிரார்த்தனை செய்தவற்கு மட்டும் மாநாயக்க தேரர்களின் கடமையல்ல.பிரதமருக்கும் பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.
ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பிரதமர் கோமாளி போன்று செயற்பட்டு மக்களுக்கு தகவல்களை வழங்கும் உரிமையை முடக்கியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.