முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, கறுப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்து உட்பட, அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, அனைத்து தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். நேற்று வரை, 280.20 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.இவ்வாறு பெறப்படும் நிதி, கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.அதன்படி, ‘ரெம்டெசிவிர்’ போன்ற உயிர்காக்கும் மருந்துகளை, அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து, திரவ ஆக்சிஜனை எடுத்து வர தேவையான கன்டெய்னர்கள் வாங்கவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., ‘கிட்’ வாங்க, 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அடுத்து சிப்காட் நிறுவனம் வழியே, சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகள் வாங்க, 41.40 கோடி ரூபாயை ஒதுக்கி, முதல்வர் உத்தரவிட்டார்.நேற்று கறுப்பு பூஞ்சை நோய்க்கு தேவைப்படும், ‘ஆம்போடெரிசின் – பி’ உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளையும் வாங்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.
ஊக்கத்தொகை வழங்க ரூ.160 கோடி ஒதுக்கீடு
கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 160 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.கொரோனா தடுப்பு பணியில், ஏப்ரல் முதல் இந்த மாதம் வரை தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசு பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், அரசு மற்றும் உள்ளாட்சிகளின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி ஊக்கத்தொகை வழங்க, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக, பொது சுகாதாரத் துறை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.