கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை

326 0

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 308 பேர் என்கிற நிலையில் உயர்ந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

கள்ளக்குறிச்சி சிறுவங்கூரில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து அவர் அங்குள்ள கூடுதல் கொரோனா சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 308 பேர் என்கிற நிலையில் நலம் பெற்றவர்கள் எண்ணிக்கை 376 பேர் என உயர்ந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போல் தமிழகத்தில் நேற்று(அதாவது நேற்று முன்தினம்) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆயிரம் என்கிற அளவில் நலம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரம் என்கிற அளவில் உயர்ந்துள்ளது. இது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை தருகிற வகையில் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு பல்வேறு நெருக்கடியான நிலை இருந்தது. ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது படுக்கைகள் கூடுதலாக உள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் நேற்று(நேற்று முன்தினம்) 37 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருந்தன. ஆக்சிஜன் தேவைக்கு கூடுதலாக கையிருப்பு உள்ளது.

கள்ளக்குறிச்சியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தமிழகத்தில் 2 ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள், 3 ஆயிரத்து 700 மருத்துவம் சாரா பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த ஒரு வார காலத்தில் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு 30 மருத்துவர்கள், 68 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் 22 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். திருக்கோவிலூர் அரசு மருத்துமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடு்க்கப்படும் என்றார்.

தொடர்ந்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட கொரானா வார்டை அமைச்சர்கள் திறந்துவைத்தனர். பின்னர் அவர்களிடம் சங்கராபுரம் அனைத்து பொது சேவை அமைப்புசார்பில் மருத்துவமனைக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 10 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 4 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி ஆகியவை வழங்கப்பட்டன. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் கிரண்குராலா, பொன்.கவுதமசிகாமணி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த், மருத்துவக்கல்லூரி டீன் உஷா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சதீஷ்குமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்