கூழுக்கு கும்பி அழும் வறுமையில் கோட்,சூட்டில் அலம்பல் செய்யும் கும்பல்

318 0

201612261304056824_living-in-poverty-congo-dandies-in-alligator-boots-and_secvpfகும்பி கூழுக்கு ஏங்குது – கொண்டை பூவுக்கு அலையுது என்ற தமிழ் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதிநவீண மேல்நாட்டு பாணியை கடைபிடிப்பதற்காக ஒரு கும்பல் லட்சக்கணக்கில் செலவழித்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சுமார் 10 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1960-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்நாட்டில் வாழும் தற்போதைய தலைமுறையினரின் முன்னோர்களில் சிலர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போர் முடிந்து காங்கோவுக்கு இவர்கள் திரும்பியபோது சம்பளமாக கிடைத்த பணத்தை எல்லாம் விலையுயர்ந்த பேண்ட், கோட், டை, தொப்பி, ஷூ, கைக்கடிகாரம் ஆகியவற்றை வாங்கிகொண்டு வெறுங்கயுடன் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

போதுமான உணவு கிடைக்காமல் அந்நாட்டு மக்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வறுமை நிலையில் அரைப்பட்டிணியாக கிடக்கும் நிலையில், ‘பிரிட்டிஷ் துரை’ பாணியில் மிடுக்கான, விலையுயர்ந்த உடையலங்காரத்துடன் அவர்கள் உலா வந்தனர்.

அவர்களது செய்கையையும், ஊதாரித்தனத்தையும் பார்த்து சொந்த குடும்பத்தினர் வயிறெரிந்தாலும், உள்ளூரில் வசிப்பவர்களிடையே இவர்களுக்கு போலியானதொரு மரியாதையும், வறட்டு கவுரவமும் கிடைத்தது.

இந்த பிரிவினரை சேர்ந்தவர்களின் வாரிசுகளும், இவர்களைப்போல் நாமும் மிடுக்காக தோன்ற வேண்டும் என்று முன்னர் நினைத்த இன்றைய இளையதலைமுறையினரும் இதே பாணியை பின்பற்ற ஆரம்பித்தனர்.

குறிப்பாக, காங்கோ குடியரசுக்கும் காங்கோ நதி பாயும் பிரேஸவில் காங்கோ பகுதிக்கும் இடையில் வசிக்கும் ஏழை மக்களிடம் இந்த ஆடம்பர மோகம் அதிகமாக தலைதூக்க தொடங்கியது.

இதன்விளைவாக, இதைப்போன்ற விலையுயர்ந்த நவநாகரிக உடை அணியும் நபர்களுக்காக ‘லா ஸாப்பே’ என்ற தனியொரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தின் தலைவராகவும், இப்பகுதியின் உடையலங்கார கதாநாயகனாகவும் மேக்ஸைம் என்பவர் இருந்து வருகிறார். இவர்கள் பயன்படுத்தும் கோட், சூட் ஒவ்வொன்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய ‘பிரான்டட்’ பொருட்களாகவே உள்ளது.

முதலை தோலினால் தயாரிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஷுக்களை அணிந்தபடி சேரிப்பகுதியில் உள்ள தங்களது வீடுகளைவிட்டு இவர்கள் வெளியே வருவதை ‘காணக் கண் கோடி வேண்டும்’ எனலாம். இவர்கள் ஒரு ஜதை ஷூ வாங்கும் பணத்தை வைத்து இங்கு பல ஏக்கர் நிலம் வாங்க முடியும்.

இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் பல ஜோடி கோட்,சூட், ஷுக்களை வைத்திருக்கிறார்கள். டைகள் மற்றும் தொப்பிகளும் டஜன் கணக்கில் உள்ளன.

இவர்கள் அனைவரும் அசத்தலான உடையலங்காரத்துடன் வாரந்தோறும் சனி,ஞாயிறுகளில் ஒரு இடத்தில் சந்தித்து தங்களது சுயப்பெருமையை ஒருவருக்கொருவர் பறைசாற்றிக்கொள்ளத் தவறுவதில்லை.

இவர்களில் சிலர் தந்தையின் தொழில் வருமானத்தில் இருந்து பணத்தை திருடி தங்களது நவநாகரிக மோகத்துக்கு தீனிபோட்டு வந்துள்ளனர். வேறு சிலர், பிறரிடம் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கி தங்களது ஆசையை நிறைவேற்றிகொண்டு, அதன் பலனாக குடும்பத்தையும், மனைவி, பிள்ளைகளையும் கடன்தொல்லையில் சிக்கவைத்துவிட்டு, செத்து மடிந்துள்ளனர்.

லாட்டரி விளையாடி கிடைத்த பலகோடி ரூபாய் பணத்தை உடைகளுக்காகவே செலவழித்த ஒருவரும் இந்த இயக்கத்தில் உண்டு.குடும்பத்தவர்கள் பனங்கிழங்குகளையும், பனம்பழச் சாற்றையும், கீரை, காய்கறிகளையும் அரை வயிற்றுக்கு சாப்பிட்டு வயிரையும், உயிரையும் காப்பாற்றிவரும் நிலையில், இந்த ‘ஜென்டில்மேன்’களைப் போலவே தாங்களும் வாழ்வதே இங்குள்ள பல குழந்தைகளின் இன்றைய லட்சியக் கனவாக உள்ளது.’காங்கோ டான்டீஸ்’ என்று இவர்களை குறிப்பிட்டு சமீபத்தில்ஒரு செய்திப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=sH-5ELWTs1A