ஆற்று மணல் விற்பனையில் ரூ.4.75 லட்சம் கோடி ஊழல்

274 0

201612261130580798_ramadoss-report-corruption-in-the-sale-of-river-sand_secvpfசி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஆற்று மணல் விற்பனையில் ரூ.4.75 லட்சம் கோடி ஊழல் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வடமாவட்ட ஆற்று மணல் ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியில் தொடங்கி தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வரை அனைவரின் வீடுகளிலும் வருமானவரி சோதனையில் கிடைத்த பணம் முழுவதும் மணல் கொள்ளை மூலம் கிடைத்தவை தான் என்பதிலிருந்தே ஆற்று மணல் ஊழலில் பிரம்மாண்டத்தை உணர முடியும்.

மணல் விற்பனையை முறைப்படுத்துவதாகக் கூறியும், அரசின் வருவாயை அதிகரிக்கப் போவதாகக் கூறியும் கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆற்று மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன. மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட போதிலும், அவற்றிலிருந்து ஆற்று மணலை அள்ளி வேறு இடத்தில் வைத்து விற்பனை செய்வதற்கான உரிமம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது.

மணல் குவாரிகளில் இருந்து தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மணல் வெட்டி எடுக்கப்பட்டு, வேறு இடத்தில் வைத்து விற்பனை செய்யப்படும் என்று அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், உண்மை நிலை வேறாக உள்ளது.

மணல் குவாரிகளிலேயே தனியார் ஒப்பந்ததாரர்கள் விதிகளை மீறி எந்திரங்கள் மூலம் மணலை அள்ளி, கொள்ளை விலைக்கு விற்பனை செய்கின்றனர். 2003ஆம் ஆண்டுக்கு முன் ஒவ்வொரு கிராம அளவில் மணல் அள்ள சிலருக்கு உரிமம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் மூலம் அரசுக்கு வருவாய் வந்தாலும் ஆட்சியாளர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதனால் மணலிலும் பணம் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மொத்தமாக ஒப்பந்தக்காரர்களிடம் கோடிகளில் பணம் வசூலிக்கும் நோக்குடன் தான் ஆற்று மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்டன.

மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகு ஆட்சியாளர்களின் வருவாய் தான் அதிகரித்ததே தவிர அரசின் வருவாய் அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் ஊழல்கள் தான்.

தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் ஒரு நாளைக்கு 8300 சரக்குந்து மணல் மட்டுமே வெட்டி எடுக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் கணக்குக் காட்டு கின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சம் மணல் சரக்குந்துகள் உள்ளன.

ஒவ்வொரு சரக்குந்தும் தினமும் ஒரு முறை மணல் அள்ளுவதாக வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் சரக்குந்து மணல் அள்ளப்படுகிறது. ஒரு சரக்குந்து மணல் சராசரியாக 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பார்த்தால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.100 கோடியும், ஆண்டுக்கு ரூ.36,500 கோடியும் வருமானம் கிடைக்கிறது.

கடந்த 2003-04 முதல் இப்போது வரையிலான 13 ஆண்டுகளில் மணல் விற்பனையாளர்களுக்கு சுமார் ரூ.4.75 லட்சம் கோடி வருமானம் கிடைத்த நிலையில், அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.2000 கோடிக்கும் குறைவு தான். மீதமுள்ள வருமானம் முழுவதும் ஆட்சியாளர்கள், அவர்களின் தரகர்கள், மணல் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பது தான் வேதனையான உண்மை.

இப்போது கூட சேகர் ரெட்டிக்கு வழங்கப்பட்டிருந்த மணல் எடுக்கும் ஒப்பந்தத்தை இன்னும் அதிக தொகைக்கு ஆறுமுக சாமிக்கு வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கிடைக்கும் அரிய இயற்கை வளங்களான தாது மணல், ஆற்று மணல், கிரானைட் ஆகியவற்றை வெட்டி எடுப்பதையும், விற்பனையும் முறைப்படுத்தினாலே தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும்.

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அடைத்து விட முடியும். ஆனால், அனைத்து முன்னேற்றங்களுக்கும் ஊழல் தான் பெருந்தடையாக இருக்கிறது.

எனவே, ஆற்று மணல் குவாரிகளின் நிர்வாகம் மற்றும் ஆற்று மணல் விற்பனையை தனியாரிடமிருந்து பறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன், கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த மணல் கொள்ளை மற்றும் ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.