சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு விளக்கம் கேட்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் பதவி ஏற்க வேண்டும் என்று அ.தி.மு.க வினர் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் 11 பேர் கடந்த வாரம் ஒன்று கூடி போயஸ்கார்டனுக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார்கள்.அவர்கள் அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத சசிகலாவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார்.பல்வேறு அரசியல் கட்சிகளும் துணை வேந்தர்களின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றன.இதனால் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறையிடம் கவர்னர் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது. சசிகலாவை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கும் விளக்கம் கேட்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடிதம் சென்றுள்ளது.
சசிகலாவை சந்தித்த துணைவேந்தர்கள் விவரம் வருமாறு:-
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.எம்.மூர்த்தி, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சுவாமிநாதன், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளி, அம்பேத்கர் பல்கலைகழக துணைவேந்தர் வணங்கா முடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன்.
பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் முருகன், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் தங்கசாமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் திலகர் ஆகியோர் சசிகலாவை சந்தித்த பட்டியலில் உள்ளனர்.இது குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பசுபதி ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று சசிகலாவை சந்தித்து வந்துள்ளனர்.இந்த செயலானது பல்கலைக்கழக விதிகளுக்கும் இறையான்மைக்கும் எதிரானது. பல்கலைக்கழகங்களில் உள்ள துணை வேந்தர்கள் எந்த அரசியல் கட்சியும் சாராத நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அனைவரும் சென்று அரசியல் சார்பாக ஒரு கருத்தை தெரிவித்து விட்டு வந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் அரசியல் சார்ந்த கருத்தை தெரிவித்தால் பணியில் இருந்து நீக்கம் செய்யலாம் என்று விதி இருக்கிறது. இவர்கள் தனிப்பட்ட முறையில் சென்று சந்திக்கவில்லை. துணைவேந்தர்கள் என்ற முறையில் தான் சென்று சந்தித்து இருக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு செல்ல எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் அரசு சாராத ஒருவரை சென்று பார்ப்பது என்பது, இவர்கள் அனைவரும் எவ்வாறு பதவிக்கு வந்தனர் என்பதை வெளிப்படுத்துகிறது.
விதிகள் மற்றும் மரபுகளுக்கு மாறாக துணை வேந்தர்களின் இந்த செயலுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.பல்கலைக்கழக வேந்தரான கவர்னர், உயர்கல்வியை பாதுகாக்க உடனடியாக துணைவேந்தர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.