வெளியூர்களில் இருந்து நீலகிரி வர நாளை முதல் மீண்டும் இ-பாஸ் கட்டாயம்

266 0

வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் மாவட்டத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய போது வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று வர கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்ததும், இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கொரேனா தொற்றின் 2-வது அலையால் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொற்று பாதிப்பு 500 என்ற எண்ணிக்கையை கடந்து வருகிறது. தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தொற்று பரவலுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வதே காரணம் என்று கூறப்பட்டது.

மேலும் தற்போது இ-பதிவு முறை அமலில் உள்ளதால் பலர் சுலபமாக தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து இ-பதிவு பெற்று நீலகிரிக்கு வர தொடங்கினர். இதனை சிலர் தவறாக பயன்படுத்துவதால் மாவட்டத்தில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு செல்பவர்களுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு அவசர காரணங்களுக்காக வருகிறவர்கள் கட்டாயம் மாவட்ட கலெக்டரிடம் இ-பாஸ் பெற வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற காரணங்களாக இருந்தால் மட்டும் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் மாவட்டத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.