திருச்சி முகாமில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

290 0

download-8இந்தியாவிற்கு சுற்றுலா வீசாவில் சென்றபோது கைதுசெய்யப்பட்ட ஈழத் தமிழர்களும் அகதி முகாமிலுள்ள ஈழத் தமிழர்களும் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக திருச்சி விசேட முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிற்கு கோவில் தரிசனத்திற்காகச் சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தவேளை தம்மை கியூ பிரிவுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தம்மீது விசாரணையொன்று உள்ளதாக அழைத்துச் சென்ற கியூ பிரிவுக் காவல்துறையினர் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த இவர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தம்மை விடுதலைசெய்து இலங்கைக்கு மீண்டும் அனுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடனசபாபதி பிரபாகரன், சுதாகரன் சுதர்சன், பேரின்பநாயகம் கோபிநாத், கிருஷ்ணபிள்ளை தயாகரன், உமாகாந்தன் குருவிந்தன், ஜெகதீபன் தர்ஷன், கந்தசாமி சத்தியசீலன், சகாயநாதன் ரொபின்பிரசாத், சிவசுப்ரமணியம் காந்தரூபன், நாகராஜன் குணசீலன் மற்றும் ரகுநான் யோககுமார் ஆகியோரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

download-9