கன்னட கொடி மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்த அமேசான் இ-வணிக நிறுவனத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
உலகில் இ-வணிக நிறுவனங்கள் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான பொருளை பதிவு செய்து வாங்கி வருகிறார்கள்.
இதற்கிடையே, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், மெக்சிகோ ஆகிய நாடுகளில் அமேசான் இ-வணிக நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்ட உள்ளாடை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாடுகளில் கன்னட கொடி மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட உள்ளாடை விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
அமேசான் இ-வணிக நிறுவனத்தின் இச்செயலுக்கு கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கன்னட கொடியை அவமதித்த கனடாவுக்கு கன்னடர்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். அமேசான் தனது தவறை சரிசெய்து கொண்டுள்ளது. கூகுளுக்கு பாடம் கற்பித்த பிறகு தற்போது அமேசானுக்கு பாடம் புகட்டியதில் கன்னடர்களின் மாநிலப் பற்று மேலோங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இதற்காக கன்னடர்களைப் பாராட்டுகிறேன்.
கன்னடம், கர்நாடக விஷயத்தில் பெரும் நிறுவனங்கள் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன. கூகுள் போன்ற தனியார் நிறுவனங்கள், கன்னடர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். கன்னட விஷயத்தில் அந்த நிறுவனங்கள் அலட்சியமாக செயல்பட்டது ஏன் என்று பதிலளிக்க வேண்டும்.
கன்னட கொடியுடன் மாநில அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையும் அவமதிக்கப்பட்டு உள்ளது. இது கர்நாடக அரசுக்கு இழைத்த அவமானம் ஆகும். இதையொட்டி மாநில உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.