எமது மொழியையும் சமயத்தையும் வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்க இவ்வாறான விழாக்களை நாம் நடத்த வேண்டும் என இன்றையதினம் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நாவலர் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர் நடராஜன் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில் எமது தமிழ் மொழியை வளர்ப்தற்காக இவ்வாறான விழாக்களை நாம் நடாத்த வேண்டும். அப்போது தான் எமது மொழியையும் சமயத்தையும் வளர்ப்பதற்காக பாடுபட்டவர்களின் புகழ் என்றும் எம்மோடு இருக்கும். தமிழை நேசிக்கும் உண்மையான மக்கள் இந்த யாழ்ப்பாணத்திலே தான் இருக்கின்றார்கள். அவர்களை நான் மதிக்கின்றேன்.
நாவலரால் எழுதப்பட்ட நூல்கள் யாழ்ப்பாண நூலகத்திலே காணப்பட்டன, ஆனால், அவை எரிந்து போய்விட்டன. இதனை அறிந்த நான் இந்தியா சென்றிருந்த வேளை அங்கே நாவலர் பெருமானால் எழுதப்பட்ட பழமை வாய்ந்த புத்தகங்களை கண்டேன், எனவே அதன் பிரதிகளை ஒன்றாக்கி 10 புத்தகங்களாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் யாழ்ப்பாண நூலகத்திற்கு கொடுக்கவுள்ளேன்.
இங்கே வழங்கப்பட்ட நாவலர் உருவச் சிலைகள் கண்ணாடி பெட்டியில் வைக்கப்படவேண்டிய பொருள் அல்ல, பிரார்த்தனை மண்டபங்களில் வைத்து தமிழோடு சேர்த்து பூஜிக்கபடவேண்டியவை. எனக்கு ஆறு மொழிகள் சரளமாக பேசத் தெரிந்தாலும், தமிழ் மொழியில் பேசும் போதே திருப்தி அடைகின்றேன் என தெரிவித்தார்.