இலங்கை அமெரிக்காவிடம் விடுத்துள்ள கோரிக்கை!

234 0

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார குழுவிடம் இலங்கை உத்தியோகப்பூர்வமாக கோரியுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் அந்த நாட்டு காங்கிரஸ் சபையில் இலங்கை குறித்த யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இலக்கம் 413 என்ற குறித்த யோசனை மேலும் நான்கு உறுப்பினர்கள் அடங்களாக கடந்த 18 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, குறித்த யோசனையின் ஒருதலைபட்ச தன்மையை ஆராயும் போது, அது மனித உரிமைகள் யோசனை இல்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்கொண்டு செல்வதற்காக, காங்கிரஸில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாக இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அறிக்கையை காங்கிரஸ் சபையிலும், ஆசியா தொடர்பான உப குழுவின் பிரதிநிதிகளிடத்திலும், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்திலும் முன்வைக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதில் உறுதிப்படுத்தப்படாத உண்மைக்கு புறம்பான விடயங்கள் அடங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அமெரிக்கா காங்கிரஸ் சபைக்கு அறிவித்துள்ளது.