மருத்துவமனையில் தீ விபத்தின் போது, பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய, செவிலியர் ஜெயகுமாரை, முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்துாரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை இரண்டாவது தளத்தில், மே 26ம் தேதி இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36 பச்சிளங்குழந்தைகள் இன்குபேட்டரிலும், 11 குழந்தைகளுடன் தாய்மார்களும் சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்டதும், அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயகுமார், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைத்தார்.
தீயணைப்பு வீரர்கள் வரும் முன், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து, அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றினார்.
இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், செவிலியர் ஜெயகுமாரை தன் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி சிறப்பு செய்தார்.இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.எல்.ஏ., உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.