:”முதல்வர் பேச்சை மக்களும் கேட்பதில்லை; அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவாகவே, கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது,” என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
காயிதே மில்லத், 126வது பிறந்த நாளையொட்டி, சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில், நேற்று அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுலஇந்திரா, வளர்மதி ஆகியோர், மலர் போர்வை போர்த்தி, மரியாதை செலுத்தினர்.
இறப்பு அதிகம்
அதன்பின் ஜெயகுமார் அளித்த பேட்டி:அ.தி.மு.க., எழுச்சியோடு உள்ளது. பன்னீர்செல்வம்., — பழனிசாமி., இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இருவரும் இயல்பாக சந்திக்கின்றனர்; ஆச்சரியப்பட ஏதுமில்லை.நாங்கள் ஆளும் கட்சியாக இருந்த போது, கொரோனா தொற்றால், உச்சகட்டமாக, 7,000 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, 25 ஆயிரமாக உள்ளது; இறப்பு அதிகமாக உள்ளது.
கோவை மண்டலத்தில், ஓராண்டில், 400 பேர் இறந்திருந்தனர். தி.மு.க., ஆட்சியில், ஒரு மாதத்தில், 745 பேர் இறந்துள்ளனர். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது; அவர் நல்ல அதிகாரி. அமைச்சர்கள் சரியாக செய்யாததால், அதிகாரிகள் குழு நியமிக்கப்படுகிறது.
மைக்ரோ லெவல்
ஆட்சியாளர்கள் அதிகாரிகளை நம்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், அடிக்கடி ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வீடு வீடாக சென்று, மக்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.’மைக்ரோ லெவல்’ என்ற வகையில் பணி செய் தோம். அதை தி.மு.க., ஆட்சியில் செய்யாததால், கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.
வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக ஊரடங்கு போட்டனர்; முழுமையான ஊரடங்காக இல்லை.முதல்வர் பேச்சை மக்களும் கேட்கவில்லை; அதிகாரிகளும் கேட்பதில்லை. அதன் விளைவால் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.