தமிழீழ தேசத்தின் கல்வித் திணைக்களகமாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினரால் இன்று 5.6.2021 சனிக்கிழமை தமிழீழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் குழந்தைகளின் தமிழ்க் கல்வியின் மேம்பாட்டுக்காக, புலம்பெயர்ந்த தேசத்தில் தமிழ் பயிலும் மூன்றாவது தலைமுறையினரின் தமிழ்மொழி ஆற்றலை இலகுவாக வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் புதிய தமிழ்ப் பாடநூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இன்றைய கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி இந் நிகழ்வு பதின்நான்கு நாடுகளில் இணையவளி ஊடாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினரால் ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் தமிழ்க் கல்விக் கழகத்தின் நடுவகப் பணியகத்தின் முன்பாக உள்ள வாகனத் தரிப்பிடத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டது.
இன்று தமிழீழ போராட்ட வரலாற்றில் முதற் சாவைத் தழுவிக்கொண்ட பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு தினமானதால் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திய பின்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.
தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழ்க்கல்விக் கழகத்தின் மாநில துணைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வி. பிரியந்தினி சிறீகாந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து முதற் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்க்கல்விக் கழகத்தின் மாநில துணைச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்வி. வைதேகி லோகானந்தம் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழினத்தின் மரபு தழுவி மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது மங்கல விளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், யேர்மனிக்கிளைப் பொறுப்பாளர், திரு. யோ.சிறிரவி அவர்களும், அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வழங்கற் பிரிவு இணைப்பாளர் திருமதி சுபத்திரா யோகேந்திரன் அவர்களும், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் அவர்களும், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிதிப் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி. மோகனேஸ்வரி குணாளன் அவர்களும், தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னணிச் செயற்பாட்பாளர்களில் ஒருவரான செல்வன். பிரவீன் செல்வேந்திரன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால், மேம்படுத்தப்பட்ட பாடநூல்களின் முதல் இரண்டு நூல்கள் யேர்மனியிலே தமிழ்க் கல்விக் கழகத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழினத்தின் பண்பாட்டிற்கிசைவாகத் தீபஒளியேந்திவர, நூலாக்கற் குழுவினர் புடைசூழ மழலையர் நிலைக்கான நூலினை, நூலாக்கற் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான திருமதி யமுனாராணி தியாபரன் அவர்களும், சிறுவர் நிலைக்கான நூலினை, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வழங்கற் பிரிவுப் பொறுப்பாளர் அவர்களும் வெளியீட்டிற்காக எடுத்துவந்து யேர்மன் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களிடம் கையளித்தனர்.
பின்பு மழலையர் நிலை நூலை. தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் திருவாளர் இராஜ. மனோகரன் அவர்கள் வெளியிட்டு வைக்க அதனை மழலைச் செல்வம் தமிழி ராமேஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
சிறுவர் நிலை நூலை தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் ஆவணப் பிரிவுப் பொறுப்பாளர் திருவாளர் நாராயணசாமி மனோகரன் அவர்கள் வெளியிட்டு வைக்க அதனை மழலைச் செல்வம் மயூரா தீபன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை நூலாக்கற் குழுவினருக்குச் சான்றிதழும், பழக்கூடையும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நூலாக்கற்குழுவினர்க்கும், அதற்கு உதவியவர்களுக்குமான மதிப்பளிப்பை யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லiயா லோகானந்தம் அவர்கள் வழங்கிவைத்தார். நூலாக்கற் குழுவின் உறுப்பினர்களான திருமதி. யமுனாராணி தியாபரன், செல்வன் சேரன் யோகேந்திரன், திருமதி. ஞானச்செல்வி திருபாலசிங்கம் ஆகியோருக்கும், நூலாக்கத்திற்கு உதவியமைக்கான மதிப்பளிப்பை செல்வி வைஷ்ணவி தியாபரன், செல்வன் அபர்ணனன் தியாபரன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.