ஈழவிடுதலைப்போராட்டத்தின் முதலாவது தற்கொடையாளன்; தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் 47ம் ஆண்டு நினைவு தினம் இன்று மறைவிடங்களில் டெலோவின் முன்னாள் இந்நாள் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியவசிய தேவை தவிர்ந்தவைக்கு பயணத் தடை உள்ளமையினால் சுகாதார ரீதியிலான காரணங்களினை முன்னிறுத்தி தடை விதிக்கப்பட்டதாக தவிசாளர் ஊடகங்களிற்கு தெரிவித்துன்ளார்.
இன்று தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில்; சயனட் அருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய முதல் வித்து பொன் சிவகுமாரனின் 47 ஆவது நினைவு தினம் ஆகும். இத் தினத்தினை உத்தியோகபூர்வமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை வருடாவருடம் அனுஸ்டித்து வருகின்றது. இந் நிலையில,; நேற்றைய தினம் பொன் சிவகுமாரனின் சிலை மற்றும் நினைவுத்தூபி உள்ள பகுதிகள் பிரதேச சபையினால் சிரமதான செய்யப்பட்டது.
பகிரங்க நினைவேந்தலினை, கொரோனா அபாய பயணத்தடைகள் நீக்கத்தின் பின்னர் பிரிதொரு தினத்தில் உரிய ஏற்பாடுகளுடன் மேற்கொள்ள சபையின் கட்சித்தலைவர்கள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் சிலைக்கு இன்றைய தவிசாளர் விளக்கேற்றி வைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தவிசாளரும்; அனுமதிக்கப்படாத நிலையில் பிரத்தியேக இடத்தில் அஞ்சலித்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கமோ தன்பாட்டில்; வீட்டில் விளக்கேற்றி அஞ்சலித்துக்கொண்டார்.
இதனிடையே முன்னாள் பிரதி சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 19வது நினைவு தினம் இன்று நெல்லியடியில் அனுஸ்டிக்கப்பட்டது.
நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவுச் சிலையில் சுடர் ஏற்றி மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னைநாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் உபாலி பொன்னம்பலம், முன்னாள் அதிபர் இ.ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.