கருப்பு பூஞ்சை மருந்து உற்பத்தி- ஓசூர் நிறுவனத்துக்கு அனுமதி

362 0

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மைலான் லேப்ரட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் தகுதியான நிறுவனங்கள் ஆம்போடெரிசன்-பி மருத்தை உற்பத்தி செய்ய விண்ணப்பங்கள் அளித்தால் அதற்கு உடனடியாகஅனுமதி வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் தீவிர பாதிப்புக்குள்ளாகி அதில் இருந்து மீண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

அதன்படி இதுவரை மாநிலம் முழுவதும் 550-க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 20-க்கும் அதிகமானோர் இறந்ததாகவும் தெரிகிறது.

இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஆம்போ டெரிசின் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், மேலும் அந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் மூன்று நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

மற்றொரு புறம் ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், மைலான் லேப்ரட்ரீஸ் நிறுவனத்திற்கு ஆம்போடெரிசின்-பி மருந்து உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.