வாலாஜாவில் ஆயுர்வேத முக கவசம்

387 0

அதிமதுரம், சிந்தில் கொடி, விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி, கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்பட 16 வகையான மூலிகைகளை கொண்டு ஆயுர் வேத முக கவசங்களை என்ஜினீயரிங் மாணவர் தயாரித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நாகய்யாசெட்டி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சஜீத் (வயது 19). இவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். ரசாயன பொறியியல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், சுவாச மண்டலத்தில் சிரமம் ஏற்படுத்தாத வகையில் ஆயுர்வேத முறையில் புதிய முககவசங்களை தயாரித்து வருகிறார். புத்தகங்களை படித்து மூலிகைகளின் பலன்களை தெரிந்து கொண்டு, இறுதியில் சுவாசக் கோளாறுகளை நீக்கும் அதிமதுரம், சிந்தில் கொடி, விஷ்ணுகிராந்தி, பர்படாகம், புதினா, துளசி, கஸ்தூரிமஞ்சள், கற்பூரம் உள்பட 16 வகையான மூலிகைகளை கொண்டு ஆயுர் வேத முககவசங்களை தயாரிக்கிறார்.
ஆயுர்வேத முககவசங்களை சவுத் இந்தியன் டெக்ஸ்டைல்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு சோதனைக்காக அனுப்பி உள்ளார். தனது தந்தையின் உதவியோடு சஜீத், கடந்த 2 மாதங்களாக ஆயுர்வேத முககவசங்களை தயாரித்து நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் என கொரோனா நேரத்தில் பணியாற்றுவோருக்கு நாள்தோறும் இலவசமாகவும் வழங்கி வருகிறார்.
துணியாலான இந்த முககவசத்தில் மூலிகைகள் அடங்கிய சிறு குப்பி மூக்குக்கு அருகில் வைக்கப்படுகிறது. இந்தக் குப்பியில் நிரப்பப்பட்டுள்ள 16 மூலிகைகள் அடங்கிய கலவையை சுவாசிக்கும்போது இருமல், சளி, கபம், தொண்டை வலி உள்பட சுவாசக் கோளாறுகள் ஆகியவை நீங்குவதோடு, புத்துணர்ச்சியோடு இருப்பதாகவும், சுவாசிக்க எளிமையாக உள்ளதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் சுவாசக்கோளாறு இன்றி இந்த முககவசத்தை அணியலாம் என்றும் சஜீத் தெரிவித்தார்.
மேலும் முககவசத்தை துவைத்து 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று மாணவர் சஜீத் தெரிவித்தார்.