கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு இறுதி வரைவு அறிக்கை: மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

268 0

கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தண்ணீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் தமிழக முதல்-அமைச்சராக இருந்த போது நடந்த பல்வேறு கூட்டங்கள், கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தி உள்ளேன்.
மத்திய ஜல்சக்தி துறையின் கீழ் செயல்படும் தேசிய நீர் மேம்பாட்டு முகமை கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயார் செய்து இறுதி செய்துள்ளதாகவும், மாநில அரசுகளின் கருத்துகளுக்காக இந்த வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகி உள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதற்காக எனது சார்பிலும், தமிழக விவசாயிகள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரைவு அறிக்கை அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.
இதன்மூலம் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பயன்பெறுவர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனைக்கும் இது தீர்வாக அமையும்.
விரைவில் இந்த திட்டத்துக்கான தொடக்க விழாவையும், திட்டம் நிறைவேற்றப்படுவதையும் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.