9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக கையளிப்பு

308 0

இலங்கையில் தற்போது தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் 9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன

இந்த நன்கொடை இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தின் ஊடாக சுகாதார அமைச்சிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையிலுள்ள ஜேர்மனிய தூதரகத்தின் ஊடக மற்றும் கலாசாரத்துறைத் தலைவர் க்ளோடியா ரியெட்ஸ் மற்றும் இலங்கையிலுள்ள உலக சுகாதார ஸ்தாபன அலுவலகத்தின் பொதுச்சுகாதார நிர்வாகி ஒலிவியா நியெவெராஸ் ஆகியோர் இணைந்து சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியநிபுணர் அசேல குணவர்தனவிடம் இந்த முகக்கவசங்களைக் கையளித்துள்ளனர்.

நெருக்கடியான சூழ்நிலையில் இந்த நன்கொடையை வழங்குவதற்கு ஜேர்மனி முன்வந்தமையைப் பெரிதும் வரவேற்ற அசேல குணவர்தன, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முன்நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த முகக்கவசங்கள் செயற்திறனான வகையில் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு கொவிட் – 19 வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் இலங்கைக்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்திவரும் ஜேர்மனிக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் அவர் நன்றியையும் வெளிப்படுத்தினார்.

அதேவேளை இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் பங்காளியாக செயற்படுவதற்கு ஜேர்மனி தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட க்ளோடியா ரியெட்ஸ், இந்த நெருக்கடியாக சூழ்நிலையில் அயராது உழைக்கும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவதானத்துடன் செயற்பட வேண்டிய சூழ்நிலை இதுவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஒலிவியா நியெவெராஸ், இலங்கைக்கு சரியான தருணத்தில் இந்த உதவியை வழங்கியமைக்காக ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்தார்.

அத்தோடு கொவிட் – 19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு முகக்கவசம் மிகவும் அவசியமானதும் வலுவானதுமான ஆயுதமாகும் என்றும் குறிப்பிட்டார்.