இலங்கையில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக நீதி அமைச்சில் கலந்துரையாடல்

217 0

இலங்கையில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்  நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலானது, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் மருந்து தயாரிப்பு, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மேலும், இந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது மற்றும் இலங்கையில் தடுப்பூசி தயாரிப்பு தொடர்பான சட்ட நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், உள்நாட்டில் தடுப்பூசியை தயாரிப்பதன் மூலம் ஆகஸ்ட் மாதமளவில் 6 மில்லியன் தடுப்பூசிகளையும், செப்டம்பர் மாதமளவில் 7 மில்லியன் தடுப்பூசிகளையும் தயாரிக்க முடியும் என்பதுடன், இந்த இலக்கை பூர்த்தி செய்தால் செப்டம்பர் மாதம் இறுதியளவில் இந்நாட்டு மக்களில் குறிப்பிடதக்க தொகையினருக்கு தடுப்பூசியை வழங்க முடியும் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தடுப்பூசி இலங்கையில் தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவசியமான சட்ட உடன்படிக்கைகளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் / சட்ட வரைஞர் திணைக்களம் மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் ஆகியோருடனான நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.