இந்து குருமாருக்கு பிரத்தியேக சிகிச்சை நிலையம் : சோ.இரவிச்சந்திர குருக்கள் நன்றி தெரிவிப்பு

226 0

கொரோனாவால் பாதிக்கப்படும் அந்தண சிவாச்சாரியார்களுக்கு சிகிச்சை நிலையங்களில் ஒரு தனியான பிரிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பிரதமரின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் கலாநிதி இராமசந்திரக் குருக்கள் பாபு சர்மா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய தரப்பினருடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கான தனியான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.


இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நிலவும் இக்கால சூழ்நிலையில் பாதிப்புக்குள்ளான இந்துக் குருமார்களையும் கௌரவித்து தனிமைப்படுத்தும் மையமும் தங்குமிட வசதிகளையும் பிரத்தியேகமாக அமைத்து அவர்களது ஆசார முறைக்கு ஏற்றவாறு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட்- 19 கொரோனா வைரஸ் தடுப்பூசி சிகிச்சைக்கு இந்து மத குருமார்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விடயத்தை முன்னெடுத்துச் சென்று நடைமுறைப்படுத்துவது உண்மையில் சகல மதங்களையும் மதிக்கும் நற்பண்பை வெளிப்படுத்துகின்றது. இதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் கலாநிதி இராமசந்திரக் குருக்கள் பாபு சர்மா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதின குருவும் திருகோணமலை அந்தணர் குருமார் ஒன்றியத்தின் தலைவருமான சோ.இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.