சீனாவின் நகரக் கழிவுகள் இலங்கைக்கு இயற்கை உரம் என்ற பெயரில் வருகிறது- ஜே.வி.பி.

227 0

இயற்கை உர இறக்குமதியெனக் கூறிகொண்டு சீனாவின் நகர கழிவுகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்திய தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கொரோனா நிலைமைகளில் அரசாங்கம் மற்றொரு திருட்டை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும், கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நேரத்தில் உரியத் தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுத்திருந்தால் இப்பேரழிவு ஏற்பட்டிருக்காதெனவும் தெரிவித்தார்.

இலங்கையைவிட பொருளாதாரத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடுகளான மியன்மார் 37 இலட்சமும், பங்களாதேஷ் 70 இலட்ச தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளன. இயற்கை உரங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு, இரசாயன உர இறக்குமதியை நிறுத்த வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. இதனால், தேயிலை தொழிற்துறை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகிறதென்றார்.

இந்நிலையில் சீனாவிலிருந்து இயற்கை உரங்களை அரசாங்கம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்போகிறது. இவை இயற்கை உரங்கள் இல்லை. சீனா நகரங்களின் கழிவுகளில் யூரிய தௌிக்கப்பட்டு, இயற்கை உரமென கூறி உலகின் பல நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது. இயற்கை உரங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் அரசாங்கம் மற்றொரு திருட்டு வேலையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது நாட்டின் சுற்றாடலுக்கு பொறுத்தமற்ற உரங்களை, இயற்கை உரமெனக்கூறி இறக்குமதி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், நாட்டின் விவசாய மக்களுக்கு குற்றமிழைக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்ட அவர், இயற்கை உர இறக்குமதி எனக்கூறிக்கொண்டு, மற்றொரு மாபியாவுக்கு இடமளிக்க வேண்டாமெனவும் அவர் தெரிவித்தார்.