பாராளுமன்ற கொத்தணிக்கு சபாநாயகரே பொறுப்பு

196 0

பாராளுமன்ற கொரோனா கொத்தணியை உருவாக்கியதற்கான முழுப் பொறுப்பையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும், பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, “எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமையால் இவ்விபரீதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

“பாராளுமன்றத்தில் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கைகளுக்கு சபாநாயகர் செவி சாய்க்கவில்லை” என்றும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “சபாநாயகர் அலுவலகம் உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அலுவலகங்கள் பலவற்றில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன்பின்னரே, பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அக்கட்சியின் எம்.பிக்கள் பல தடவைகள் சபாநாயகரிடம் கோரிக்கைகள் விடுத்தனர்” என்றார்.

“எனினும், இக்கோரிக்கைகளுக்கு சபாநாயகர் செவி சாய்க்கவில்லை” எனக்கூறிய அவர், மரணங்களுக்கு மத்தியில் பாராளுமன்றத்தைக் கூட்டி கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை (போர்ட் சிட்டி) நிறைவேற்ற வேண்டுமென்பதே சபாநாயகருக்குத் தேவையாக இருந்ததாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாள்​தோறும் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதாகவும் லக்‌ஷ்மன் கிரியெல்ல
கூறினார்.