தீயில் வெந்து கருகி இறந்து தன் சாம்பலில் இருந்து மீண்டும் புத்துயிர் பெறும் பீனிக்ஸ் பறவையை வரலாற்று கதைகளில் தெரிந்து கொண்டோம்.ஆனால் . எங்கள் கண் எதிரே ஈழத்தமிழரின் கல்வி அறிவின் பொங்கிசமாக விளங்கிய யாழ். நூலகம் சிங்கள இனவெறி அரசால் 1981 மே 31 அன்றையநாள் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டது.
தமிழ் மக்களின் கல்வி , கலை, கலாசாரம், பண்பாடு விழுமியங்கள் மற்றும் அறிவியல் விடயங்களை தாங்கி நின்ற அந்த நூலகத்தை அழித் தொழிக்கும் நோக்குடன் யாழ் நூலகமானது எரியூட்டப்பட்டது. ஆனாலும் இன்று அந்த நூலகம் புத்துணர்வுடன் பீனக்ஸ் பறவையாய் மீண்டும் சிறகு விரித்து சிறக்கடிக்கிறது.
நூலகத்தில் இருந்து பழம்பெரும் சுவடிகள், பெறுமதி மிக்க புத்தகங்கள், பத்திரிகைகள், கையெழுத்துப் பிரதிகள் சஞ்சிகைகள் என பலவற்றின் தொகுப்புக்கள் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன. இலங்கை மற்றும் தென்னிந்திய பழைமை வாய்ந்த இலக்கியம் மற்றும் வரலராற்றுப் பதிவுகளைக் கொண்ட கிடைத்தற்கரிய புத்தகங்களும் எரித்து நாசமாகின.
எல்லாமாக சுமார் ஒரு லட்சம் புத்தகக் களஞ்சியம் இந்த சிங்கள இன வெறியாட்டத்தின் மூலம் நாசமாக்கப்பட்டது. நூலகக் கட்டிடமும் தீயினால் பெரும் சேதத்திற்கு உள்ளாகியது.
ஆசியா கண்டத்திலேயே சிறந்த பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ் நூலகம் எனும் அறிவுக்களஞ்சியம் இன வெறி கொண்ட பௌத்த பேரினவாதிகளால் அழித்தொழிக்கப்பட்டது. இது தமிழீழ மக்களின் அறிவுசார்ந்த செல்வத்திற்கு ஏற்பட்;ட ஈடு இணை செய்ய முடியாத பேரிழப்பாகும் . இருப்பினும் பல வலிகளை சுமந்த எம் இனம் வலிமை பெற கலங்கரை விளக்காய் மீண்டும் உத்வேகத்துடன் யாழ் நூலகம் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது.
முள்ளிவாய்கால் நினைவு தினம் ஈழத் தமிழர் வாழும் நாடெங்கும் நினைவுகூரப்படுவது போல் யாழ் நூலக எரிப்பை நினைவுகூர்ந்து “அறிவே எமது தற்பாதுகாப்பு அரண்” என்பதை எமது சந்ததிக்கு உணர்வோடும் உரிமையோடும் எடுத்துரைப்போம்.
‘“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.“
’ என்ற மகாகவி பாரதியின் எண்ணத்திற்கு வண்ணம் செய்வோம்.