மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி: யாழ். அரச அதிபர்

422 0

பயணத் தடையின்போது மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்க வடக்கு மாகாண கொரோனாத் தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கொரோனா தடுப்புத் செயலணியின் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண கொரோனாத் தடுப்பு செயலணியினுடைய விசேட கூட்டம்
இன்று (நேற்று) காலை ஆளுநர் தலைமையில் சூம் செயலி மூலம் இடம்பெற்றிருந்
தது.

தற்போதுள்ள மாகாண நிலைமைகள், யாழ்.மாவட்ட நிலைமைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேபோல் வடக்கு வைத்தியசாலைகளில் உள்ள நிலைமைகள், தேவைகள், வைத்திய உபகரணங்கள் தேவைப்பாடுகள், ஒட்சிசன் சிலிண்டர் தேவைப்பாடுகள் மற்றும் வைத்தியசாலைகளின் வசதிகள் போன்ற குறைபாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதனுடைய குறைபாடு நிவர்த்தி செய்வதற்குரிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான வாகனங்கள் வெளியேறுவதன் காரணத்தால் பயணத் தடைகாலத்தின்போது மிக அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவுறுத்தல் மிக விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.அதே நேரத்தில் கடல் மார்க்கமாக எல்லை மீறிப் பிரவேசிப்பது தொடர்
பிலும் இங்கே ஆராயப்பட்டுள்ளது” என்றார்.