கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் சென்னையை பொறுத்தவரை உயிர் பலி தொடர்ந்து அதே நிலையில்தான் உள்ளது.
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தமாக இருந்தது.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக இவ்வாறு ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் இப்போது ஆம்புலன்ஸ் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விசேஷமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு மொத்தம் 2050 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவை எப்போதும் நிரம்பி வழிந்தன.
2 வாரங்களுக்கு முன்பு வரை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி முன்பு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் காத்து கிடக்கும் நிலை இருந்தது. ஆம்புலன்சிலேயே பலர் உயிரிழக்கும் சம்பவமும் நடந்தது.
ஆனால் இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை வெகுமாக குறைந்து வருவதால் ஆம்புலன்ஸ்கள் எதுவும் காத்து இருப்பது இல்லை. தினமும் 250-லிருந்து 270 அவசர நோயாளிகள் வந்தனர். அது இப்போது 120ஆக குறைந்துள்ளது.
மொத்தம் உள்ள 2050 படுக்கைகளில் 1455 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். 595 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.
மே 10-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நோய் தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதற்கு இப்போது நல்ல பலன் கிடைத்து இருக்கிறது.
நோய் தொற்று அதிகமாக பரவிய நேரத்தில் சென்னையில் தினசரி பாதிப்பு 7,500ஆக இருந்தது. மார்ச் 22-ந்தேதி வாக்கில் 2,985 ஆனது. அதன்பிறகு மேலும் சரிந்து வருகிறது.
நேற்று முன்தினம் 2,779 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்யை பாதிப்பு 2,762ஆக குறைந்து இருக்கிறது. தினசரி தொற்று மிகவும் குறைந்து வருவதால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு வேலைப்பளு குறைந்து நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.
கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் சென்னையை பொறுத்தவரை உயிர் பலி தொடர்ந்து அதே நிலையில்தான் உள்ளது. நேற்று முன்தினம் 79 பேர் பலியாகி இருந்தனர். ஆனால் நேற்று பலி எண்ணிக்கை 107ஆக உயர்ந்து உள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 31 ஆயிரத்து 79ஆக சரிந்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 33 ஆயிரத்து 361ஆக இருந்தது. அதே போல நேற்றைய உயிர்பலி 486 ஆக உள்ளது.