எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலிலுள்ள மக்கள்

246 0

நிவாரண பொருட்களை சீரான முறையில் வழங்கவில்லை என கூறி முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பிலுள்ள புதிய குடியிருப்பு மக்கள், எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

புதிய குடியிருப்பு பகுதி, கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிவாரண பொருட்கள் சீரான முறையில் தங்களுக்கு கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தி, அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “எமது பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிநபர்களினால் வழங்கப்படுகின்ற உதவு திட்டங்களை, கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், தமக்கு வேண்டியவர்களை தேர்ந்தெடுத்து மீண்டும்  மீண்டும் அவர்களுக்கே வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர், எந்த நிவாரணங்களும் இதுவரை கிடைக்காமல் இருக்கின்றனர். இதேவேளை அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களும் கொரோனா வைரஸ்  தொற்று  உறுதி செய்யப்பட்டு  சிகிச்சைக்காக அழைத்துச் செல்பவர்களின் குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

இதனால் நாம், பாரிய இன்னல்களுக்கு தற்போது முகம்கொடுத்துள்ளோம்.  மேலும் ஏனைய பகுதிகளுக்கு தொழிலுக்கு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே எங்களது நிலைமையை உணர்ந்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.