’மூன்று அலைகளிலும் மூன்று நிகழ்ச்சி நிரல்கள்’

248 0

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் மூன்று அலைகளிலும் அரசாங்கமானது மூன்று விடயங்களை நிறைவேற்றிக்கொண்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும சாடியுள்ளார்.

“முதலாவது அலையில் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாது அலையின்போது 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாவது அலையில் கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரல் இதுதானா? என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸ் தொடர்பில் நிபுணர்களின் கருத்துகளை அரசாங்கம் கேட்பதில்லை எனக் குற்றஞ்சாட்டியதுடன்,  தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் வரையில் அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சாடினார்.

நாட்டு மக்களுக்காக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“கொரோனா தொடர்பில் வைத்தியர்கள் பேசுவதற்கும் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி விடயத்தில் அரசியல் தலையீடுகள் உள்ளன. கொரோனாவை விட தடுப்பூசியால் பாரிய நெருக்கடி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது” என்றார்.

“முதல் ​டோஸைப் பெற்றுக்கொண்ட பொலிஸாருக்கு இரண்டாவதுத் தடுப்பூசி இல்லை. இதுவரையில் வெறும் 5 இலட்சம் தடுப்பூசிகளையே அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளது. நாட்டு மக்கள் கொரோனாவால் உயிரிழந்து வருகின்ற நிலையில், தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் வரையில் அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது” என்றார்.