மின்வாரிய பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

222 0

மின்வாரிய பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு, ஓ-.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உயிர்க் கொல்லி நோயான கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிற ஆபத்தான சூழ்நிலையில் ஆங்காங்கே ஏற்படும் மின் தடைகளை சீர் செய்யும் பணியில் ஈடுபடுவது, தங்கு தடையின்றி மின்சாரத்தை பொதுமக்களுக்கு அளிக்கும் பணியை மேற்கொள்வது என பல்வேறு பணிகளை மின்சார வாரிய பணியாளர்கள் அயராது மேற்கொண்டு வருகின்றனர். தங்களது உயிரை துச்சமென மதித்து அவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா என்ற கொடிய நோய் தாக்கப்பட்டு இதுவரை 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படாததால் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை. எனவே தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அதற்குரிய சலுகைகளை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும் கொரோனா தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகி இயற்கை எய்தும் மின்வாரிய பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில்கொண்டு, அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கவும், முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.