அமெரிக்காவில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டவரை காப்பாற்றிய இந்திய ரெயில் டிரைவர்

251 0

அமெரிக்காவில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டவரை காப்பாற்றிய இந்திய ரெயில் டிரைவரை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

நியூயார்க் நகரில் ரெயில் டிரைவராக வேலை பார்த்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டோபின் மடாதில். 27 வயதான இவர் 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் டோபின் மடாதில் வழக்கம்போல் நியூயார்க் நகரில் ரெயிலை இயக்கி கொண்டிருந்தார்.

இவரது ரெயில் அங்குள்ள ஒரு சுரங்க ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தபோது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஒருவரை அருகிலிருந்த மற்றொருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.

இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் ரெயில் வரும் திசையைப் பார்த்து கைகளை அசைத்து ரெயிலை நிறுத்தும்படி சைகை காட்டினர்.

இதை கவனித்த டோபின் மடாதில் சாதுர்யமாக செயல்பட்டு அவசரகால பிரேக் மூலம் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் தண்டவாளத்தில் விழுந்த நபரிடம் இருந்து 30 அடி தூரத்தில் ரெயில் நின்றது. இதன் மூலம் அவர் மீது ரெயில் மோதாமல் அவர் உயிர் தப்பினார்.

எனினும் தண்டவாளத்தில் விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சரியான நேரத்தில் ரெயிலை நிறுத்தி ஒருவரின் உயிரை காப்பாற்றியதற்காக ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், டோபின் மடாதிலை பாராட்டினர். இதனிடையே தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது‌ விசாரணையில் தெரியவந்தது. எனவே இது ஒரு இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.